10-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று (14.05.2017) முடிவடைந்தன. மும்பை இந்தியன்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் முறையை முதல் நான்கு இடங்களைப் பிடித்து, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றன.
இதில், நேற்று மாலை நடந்த புனே - பஞ்சாப் அணிகள் இடையேயான ஆட்டத்தில், பஞ்சாப் வெறும் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இதனால், புனே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, பஞ்சாப் பரிதாபமாக வெளியேறியது. பஞ்சாப் அணியின் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் வீரேந்திர சேவாக், "நான் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளேன். விளையாடிய நான்கு வெளிநாட்டு வீரர்களும், தங்களது பொறுப்பை உணர்ந்து 12 - 15 ஓவர்கள் வரை ஆடியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி ஆடவில்லை.
அவர்கள் நால்வரும் பிட்ச் மெதுவாக இருந்ததாக குறை சொல்கிறார்கள். நீங்கள் சர்வதேச போட்டிகளில் ஆடும்போது, நல்ல பிட்சுகளும் கிடைக்கும், மோசமான பிட்சுகளும் கிடைக்கும். பிட்ச் எப்படிப்பட்டதாக இருந்தாலும், குறைந்தது 20 ஓவர்கள் வரையாவது ஆட முயற்சிக்க வேண்டும்.
மார்ட்டின் கப்தில், முதல் ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டானதில் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆனால், மார்ஷ் 12 - 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடியிருக்க வேண்டும். குறிப்பாக, மோர்கன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆவர். தொடக்க வீரர், எளிதில் அவுட்டான பின்னர், பிட்ச் தன்மை குறித்து அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
மேக்ஸ்வெல் அடிக்க ஆரம்பித்தால், தனி ஆளாக போட்டியை முடித்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், 8 அல்லது 9 போட்டிகளில் அவர் அடிக்கவே இல்லை என்பதுதான் பிரச்சனை. ஒரு கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படவில்லை, ஒரு வீரராகவும் பஞ்சாப் அணிக்கு நிலையாக ஆடவில்லை.
இந்த சீசனில், பஞ்சாப் அணிக்காக இரண்டு சதமடித்த தென்னாப்பிரிக்காவின் ஆம்லாவிடம், இந்த வீரர்களும் சரி, இந்திய வீரர்களும் சரி, நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.