இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் என மிக நீண்ட இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று(நவ.,27) தேர்வு செய்யப்பட இருந்தது. ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் இந்திய அணியை தேர்வு செய்யவில்லை.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி திங்கட்கிழமை தேர்வு செய்யப்பட இருந்தது. ஆனால், தற்போது இந்த முடிவை பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது. ஏனெனில், அணியில் இருக்கும் ரிசர்வ் வீரர்களின் தற்போதைய ஃபார்ம் குறித்தும் முழுதாக அறிய பிசிசிஐ விரும்புகிறது. குறிப்பாக, இலங்கை தொடரில் குல்தீப் யாதவ்வின் பெர்ஃபாமன்ஸ் குறித்தும் பரிசீலனை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இலங்கையுடனான இறுதி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியை தேர்வு செய்வது சிறந்தது. இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி முடியும் தருவாயிலோ, அல்லது அதற்கு பிறகோ இந்திய அணியை தேர்வு செய்வதால் நன்றாக இருக்கும் என கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.