முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன், இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஷேன் வார்ன். மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 164 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் எட்டி கோப்பையை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி. யூசுப் பதான் 56 ரன்கள் விளாசி அந்த அணியை வெற்றிப் பெற வைத்தார். (ஆரம்பத்திலேயே யூசுப் பதான் கேட்சை ரெய்னா விட்டது தனிக்கதை).
இருப்பினும், முதல் ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமை குறைந்த அணியாக வலம் வந்த ராஜஸ்தானை, கோப்பையை கைப்பற்ற வைத்த பெருமை வார்னேவையே சாரும். அதன்பின், 2011ம் ஆண்டு ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் என அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதை நிறைவேற்றும் விதமாக, 2018 ஐபிஎல் தொடருக்கு அணியின் ஆலோசகராக ஷேன் வார்னேவை நியமித்துள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம்.
ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றத்தால் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்னேவின் வரவு நிச்சயம் மிகப்பெரிய பூஸ்ட் தான். அதேசமயம், வார்னேவின் வரவு, மற்ற அணிகளுக்கு ஒரு வார்னிங் தான் என்பதிலும் சந்தேகமில்லை.