ஷிகர் தவான் அடித்த அதிரடி சதம் உதவியுடன் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை வதம் செய்தது இந்தியா. இதன் மூலமாக 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வென்றது. தொடர்ந்து தர்மசாலாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியை இலங்கையும், மொகாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியை இந்தியாவும் வென்றன. இதனால் இரு அணிகளும் ஒருநாள் தொடரில் 1-1 என சமநிலையில் இருந்தன.
ஒருநாள் தொடரின் வெற்றி யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது போட்டி இன்று (17-ம் தேதி) விசாகப்பட்டினத்தில் நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். உபுல் தரங்காவின் அதிரடியால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது.
அதிலும் ஹர்திக் பாண்டியாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக முதல் 5 பந்துகளை பவுண்டரிகளாக ஓடவிட்டு மிரட்டினார் தரங்கா. அவர் ஆடிய விதத்தை பார்த்தபோது இலங்கை சுலபமாக 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 95 ரன்களில் (82 பந்துகள், 12 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) குல்தீப் யாதவ் பந்தில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் தரங்கா.
அதன் பிறகு தடம் புரண்ட ரயில் போல இலங்கை அணி தத்தளிக்க ஆரம்பித்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹலும், குல்தீப்பும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவை வேகப்படுத்தினர். மொத்தமே 44.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை, 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு, கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மிகவும் அபாரமாக ஆடினார். ஷ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் துணையுடன் இறுதி வரை அவுட் ஆகாமல் (85 பந்துகளில் 100 ரன்கள், 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் தவான்.
ஷ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களும், தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் 26 ரன்களும் எடுத்தனர். 32.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை தொட்டு, அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலமாக ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இந்தியா. இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை என்கிற இலங்கையின் சோகம் தொடர்கிறது. ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஷிகர் தவானும் தேர்வு செய்யப்பட்டனர்.
அடுத்து இரு அணிகள் இடையிலான 3 டி-20 போட்டிகளும் முறையே டிசம்பர் 20, 22, 24 தேதிகளில் நடக்கின்றன.