இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்று, தென்னாப்பிரிக்க அணி தங்களது வழக்கமான பச்சை நிற ஜெர்ஸியை தவிர்த்து, பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து விளையாட உள்ளது. இதுவரை பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடிய போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோற்றதே இல்லையாம். இதனால், பிங்க் ஜெர்ஸி தென்னாப்பிரிக்காவை, தொடர் வெற்றிகளில் சிங்க் ஆகி அசத்தி வரும் இந்தியா வெற்றிக் கொள்ளுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, சத்தம் போடாமல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் நம்ம ஷிகர் தவான்.
அதாவது, இன்று தவான் தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார். விஷயம் அதுவல்ல... சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 100 வது ஒருநாள் போட்டியின் போது, அதிக ரன் மற்றும் அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் இந்திய வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். இதுவரை 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 4200 ரன்கள் குவித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 99 போட்டிகளில் 4,085 ரன்கள் எடுத்துள்ளார். உலகளவில் 99- வது ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்திருக்கும் வீரர் ஹஷிம் ஆம்லா மட்டுமே. 4,798 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் உள்ளார் ஷிகர் தவான்.
அதுமட்டுமல்ல, 99 ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்திருக்கும் இந்திய வீரரும் தவான் தான். இதுவரை 37 அரை சதங்கள் எடுத்துள்ளார். இரண்டாம் இடத்தில் 36 அரை சதங்களுடன் நவ்ஜோத் சிங் சித்து உள்ளார். விராட் கோலி 35 அரை சதங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 'தாதா' கங்குலி 31 அரை சதங்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளார்.
மேலும், உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட ஐசிசி தொடர்களில் அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் இந்திய வீரரும் ஷிகர் தவான் மட்டுமே. இவரது ஆவரேஜ் 65.47. இதில், உலகளவில் முதல் இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸ்னர். இவரது ஆவரேஜ் 78.00.
இந்திய அளவில் அதிக ஆவரேஜ் வைத்திருப்பவர்களில் தவானை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பவர் கங்குலி. இவரது ஆவரேஜ் 61.88. மூன்றாம் இடத்தில் 55.80 ஆவரேஜூடன் கோலி உள்ளார். 55.07, 52.28 என ராகுல் டிராவிட், சச்சின் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று தனது 100வது ஒருநாள் போட்டியை எதிர்கொள்ளும் கப்பர், வாணவேடிக்கைகளை காட்டி மேலும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்துவோம்!.