இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நேற்று ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி (D/L) முறைப்படி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம், இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "எங்கள் அணி மிகவும் வலுவாக உள்ளது. நீண்ட காலமாக நாங்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டு வருகிறோம். திறமையான இளம் வீரர்களும், நல்ல அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும் அணியில் உள்ளனர். இளம் வீரர்கள் மிகவும் பக்குவப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச வீரர்களுடன் இணைந்து ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் போது நீங்கள் உண்மையில் ஒரு நல்ல ஊக்கத்தை பெறுவீர்கள். இன்றைய நிலையில், பெரும்பாலான அணிகள் சம பலத்துடன் உள்ளன. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி எட்டிய சாதனைகளை நாம் இப்போது எட்டிப் பிடிப்பது சிறப்பான விஷயமாகும்.
ராஞ்சியில், ஆஸ்திரேலிய அணி எந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தாலும் அதனை நாங்கள் துரத்தியிருப்போம். நாங்கள் அவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆஸி., நிர்ணயித்த இலக்கு ஒன்றும் பெரியதல்ல. பந்து குறைவாகவே எழும்பினாலும், இதற்கு முன் இதுபோன்ற சூழலில் நாங்கள் ஆடி இருக்கிறோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நான் அணியில் இணைந்து போது, அணி வெற்றிப் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அந்த வெற்றியில் எனது பங்கும் இருப்பது எனக்கு ஒரு நல்ல அறிகுறி.
வெறும் ஆறு ஓவர்கள் மட்டும் விளையாடச் சொன்னால், நிச்சயம் ரசிகர்கள் அதிருப்தி ஆவார்கள். ஆனால், இறுதியில் இந்தியா பெற்ற வெற்றியை அவர்கள் அதிகம் கொண்டாடியிருப்பார்கள்.
வருங்காலங்களில் இந்தியாவின் பேட்டிங் ஆர்டரில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் நீண்ட நாள் கழித்து அணிக்கு திரும்பியது கேப்டனுக்கு நன்றாக தெரியும். வீரர்கள் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ரஹானே, ராகுல், விஜய் போன்று பெஞ்சில் இருக்கும் வீரர்களும் சிறந்த வீரர்கள் என்பதால் ஒருநாள், டெஸ்ட் ஆகிய போட்டிகளிலும் நாங்கள் வெற்றிகளை குவித்து வருகிறோம்" என்றார்.