scorecardresearch

ஸ்பின்னர்களுக்கு எமன்: ஷிவம் துபே குவித்த ரன்கள், அடித்த சிக்ஸர்கள் கூறும் புள்ளி விவரம்

இந்த சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 16 சிக்ஸர்களுடன் 177.1 ஸ்ட்ரைக் ரேட்டில் நம்பமுடியாத 49 ரன்களை எடுத்துள்ளார் துபே.

Shivam Dube CSK IPL 2023 stats in tamil
Shivam Dube IPL Stats – 2023 – Chennai Super Kings 

Shivam Dube CSK IPL 2023 Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவுக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. அந்த அணி பிளேஆஃப்-க்கு தகுதி பெற மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியை ருசித்தால் போதும்.

தும்சம் செய்யும் துபே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில்-ஆடர் பேட்ஸ்மேனாக விளையாடி வருபவர் 29 வயதான ஷிவம் துபே. இடது கை ஆட்டக்காரரான அவர் கடந்த 2019 மற்றும் 2020ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினர். அங்கு அவர் 15 போட்டிகளில் 20 க்கும் குறைவான சராசரியில், 122 ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்தார். தொடர்ந்து, 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 28.75 சராசரியில் 119.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 230 ரன்கள் எடுத்தார்.

ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்தில் துபே-வை சென்னை அணி ரூ.4 கோடி கொடுத்து வாங்கியது. நடப்பு சீசனில் அவரை அதே தொகையில் தக்கவைத்துக்கொண்டது. கடந்த சீசனில் சென்னை அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய அவர் 289 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 95* ஆக இருந்தது. தற்போது நடப்பு சீசனில் சென்னையின் முன்னணி வீரராக வலம் வரும் அவர் அதிரடியாக விளையாடி வருகிறார்.

நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள துபே 159.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 315 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் சென்னையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமாடி இருந்த அவர் வெறும் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ரன்கள் எடுத்திருந்தார். அவரது பவர்ஹிட்டிங் பேட்டிங் சென்னை அணிக்கு மிடில்-ஆடரில் பலம் சேர்த்து வருகிறது.

ஸ்பின்னர்களுக்கு எமன்

ஐபிஎல் போட்டிகள் பெரிய மைதானங்களில் நடக்கும்போது, இன்னிங்ஸின் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும். சுழற்பந்து வீச்சளர்களின் கை ஓங்கி இருப்பதை பொறுத்து ஆட்டத்தின் முடிவு அமையும். எனவே, எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது ஆல்ரவுண்டர் அனுப்பப்படுவதை உறுதி செய்வதில் அணியின் உத்தி சுழல்கிறது.

இதை நன்கு புரிந்துகொண்ட சென்னை அணி, சுழற்பந்துவீச்சின் தாக்கத்தை முறியடிக்க துபே-வை மிடில் -ஓவர்களில் களமிறக்கி வருகிறது. அவரும் தன்மீது அணி வைத்திருக்கும் நம்பிக்கையை இந்நாள் வரை காப்பாற்றி வருகிறார். இந்த சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 16 சிக்ஸர்களுடன் 177.1 ஸ்ட்ரைக் ரேட்டில் நம்பமுடியாத 49 ரன்களை எடுத்துள்ளார் துபே. அதனால், அவர் களமிறங்கும்போது சுழற்பந்து வீச்சளர்களுக்கு ஒருவித கலக்கம் ஏற்படுகிறது.

எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தாயார்

வேகம் மற்றும் சுழற்பந்துவீச்சை நொறுக்கி அள்ளும் துபே எப்போதும் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தாயார் நிலையில் இருக்கிறார். அவர் இந்த சீசனில் இதுவரை பேட்டிங் வரிசையில் நம்பர் 3 முதல் நம்பர் 7 வரை எல்லா இடங்களிலும் பேட்டிங் செய்துள்ளார். முக்கியமாக நம்பர்.4 இல் பேட்டிங் செய்த அவர் 163.8 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். திறமையான பிக்-ஹிட்டராக இருக்கும் அவர் 3-வது இடத்தில் களமிறங்கி 168.8 ஸ்டிரைக் ரேட்டில் 170 ரன்களை எடுத்துள்ளார்.

சிக்ஸர் பறக்க விடும் திறன்

ஷிவம் துபேவின் சிக்ஸர் அடிக்கும் திறமை சென்னை அணி கூடுதல் பலமாக இருக்கிறது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் தாறுமாறாக சிக்ஸர்களை அடிக்கும் திறமைக்காக துபே இந்த சீசனில் பிரபலமான வீரராக வலம் வருகிறார். இதுவரை அவர் சந்தித்த 197 பந்துகளில் 27 சிக்ஸர்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதன் மூலம், நடப்பு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் துபே இரண்டாவது இடத்தையும், சென்னை அணியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

பல சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்கள் இருந்தபோதிலும், ட20 ஆட்டங்களின் முடிவுகள் பெரும்பாலும் ஒவ்வொரு அணியும் அடிக்கும் சிக்ஸர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வகையில், சென்னை அணியில் துபே இடம்பிடித்திருப்பது அந்த அணிக்கு வரப்பிரசாதமாக அமைந்துளளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக இல்லாதவர்களில் துபே 315 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்துள்ளார். மற்றும் அஜிங்க்யா ரஹானே மற்றும் எம்எஸ் தோனிக்கு அடுத்தபடியாக 159.90 என்ற 3வது சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ளார். மேலும், இந்த சீசனில் ஓப்பனர்கள் அல்லாதவர்களில் அதிக அரைசதங்கள் அடித்தவராக இருந்து வரும் துபே சென்னை அணிக்கு மிடில்-ஆடரில் நங்கூரமாக திகழ்ந்து வருகிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Shivam dube csk ipl 2023 stats in tamil

Best of Express