Former India opener Wasim Jaffer on Rohit Sharma’s T20I future Tamil News
Shubman Gill - Rohit Sharma Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை போட்டிகள் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த தொடருக்கான அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. இந்தியாவின் தோல்வி தொடர் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு கலைக்கப்பட்டது. இதேபோல், ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான ஒரு தரமான அணியை கட்டமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
Advertisment
அதன்படி, டாப் ஆடரில் விளையாடும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க வீரர் கேஎல் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பந்துவீச்சளர்கள் ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின் போன்ற வீரர்கள் இல்லாத அணி உருவாக்கப்பட்டது. இந்த அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். சொந்த மண்ணில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் வழிநடத்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும், இரண்டு தொடர்களையும் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் விளாசி 126 ரன்கள் குவித்தார். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளிலும் தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டி இருந்த கில் டி-20 போட்டியிலும் தனக்கான இடம் இதுதான் என்று பதிவு செய்ததைப் போல சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். இதேபோல், ராகுல் திரிபாதியும் 3வது இடத்தில் களமாடி நல்ல ஸ்கோரை எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷன் டி20-யில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார்.
இந்த வீரர்களின் அதிரடியான ஆட்டம், அதிலும் குறிப்பாக கில்லின் அசத்தலான ஆட்டம் ரோகித் சர்மாவின் இடத்திற்கு சரியான "மாற்று வீரர்" என்ற யோசனையைக் கொடுத்துள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாஃபர், ரோகித் மற்றும் கோலி இந்த வடிவத்தில் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஒரு சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளார். வருகிற 2024 டி20 உலகக் கோப்பையில் கோலி விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அணியில் மீண்டும் வருவதற்கான கதவுகள் மூடப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாசித் அலியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நடந்த உரையாடிய வாசிம் ஜாஃபர், “விராட் கோலியும் ரோகித் சர்மாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் வரவிருக்கும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு ஓய்வெடுத்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறலாம். (எனினும்) எதிர்காலத்தைப் பார்க்கும்போது, இந்த விளையாட்டு இளம் வீரர்களுக்கானது. ரோகித் சர்மா அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதை நான் உண்மையில் பார்க்கவில்லை. விராட் கோலி விளையாடலாம். ஆனால் ரோகித் சர்மா நிச்சயமாக அடுத்த பதிப்பில் விளையாட மாட்டார். அவருக்கு ஏற்கனவே 35 வயது ஆகிவிட்டது.
எனவே, பெரிய படத்தைப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தொடருக்கு அவர்கள் மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது முக்கியம்.” என்று அவர் கூறியுள்ளார்.
வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பிடிப்பதற்கான இந்தியாவின் வாய்ப்புக்கு கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். அடுத்த வாரத்தில் (பிப்ரவரி 9 ஆம் தேதி) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.