புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசன்(2017) கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியானா ஆகிய நான்கு புதிய அணிகளும் அறிமுகம் ஆகின.
இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.
இதல், மொத்தம் 22 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்று, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. 14 போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டியை டிராவும் செய்தது. இதனால் 46 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் கடைசி இடத்தையே தமிழ் தலைவாஸ் பிடித்தது.
இந்நிலையில், 'ஏ' பிரிவில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், புனேரி பால்டன் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
'பி' பிரிவில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும், யு.பி.யோதா அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.