Advertisment

முதலிடத்தில் 'ஆஷஸ்' ஹீரோ ஸ்டீவ் ஸ்மித்! மல்லுக்கு நின்று மாஸ் காட்டும் புஜாரா!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடினால், மேலும் புள்ளிகள் பெற்று பிராட் மேனுக்கு அடுத்த இடத்தை ஸ்மித் கைப்பற்றி சாதனை படைக்க முடியும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதலிடத்தில் 'ஆஷஸ்' ஹீரோ ஸ்டீவ் ஸ்மித்! மல்லுக்கு நின்று மாஸ் காட்டும் புஜாரா!

நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இக்கட்டான நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை மீட்டு, 141 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இன்று உலகம் முழுவதிலும் உள்ள மூத்த கிரிக்கெட் வீரர்களின் பாராட்டு மழையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நனைந்துக் கொண்டிருக்கிறார். தனது 57-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ஸ்மித்தின் 21-வது சதம் இதுவாகும்.

Advertisment

இந்த அபார ஆட்டத்தின் மூலம், 941 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். ஐசிசி-யின் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 941 புள்ளிகள் பெற்றிருப்பதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச புள்ளிகள் பெற்ற பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மித் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் சர் டான் பிராட்மேன் 961 புள்ளிகளுடன் உள்ளார். இவரது இந்த சாதனை இதுவரை தகர்க்கப்படவில்லை. லென் ஹட்டன் 945 புள்ளிகளும், ஜேக் ஹோப்ஸ் 942 புள்ளிகளும், ரிக்கி பாண்டிங் 942 புள்ளிகளும், பீட்டர் மே 941 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். தற்போது ஸ்மித்தும் 941 புள்ளிகள் பெற்று பீட்டர் மே-வுடன் ஐந்தாம் இடத்தை பகிர்ந்துள்ளார்.

அடுத்து அடிலைடில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடினால், மேலும் புள்ளிகள் பெற்று பிராட் மேனுக்கு அடுத்த இடத்தை ஸ்மித் கைப்பற்றி சாதனை படைக்க முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி! ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு வாழ்த்துகளை தெரிவித்து அப்படியே நம்ம ஊரு பக்கம் வருவோம்.

நாக்பூர் டெஸ்ட்டில் சதம் அடித்த புஜாரா 22 புள்ளிகள் கூடுதலாக பெற்று 888 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தனது கரியரில் புஜாரா பெற்ற அதிகபட்ச புள்ளிகள் இதுவாகும். கேப்டன் விராட் கோலி 877 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், லோகேஷ் ராகுல் 735 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். ரஹானே இரண்டு புள்ளிகள் இழந்து 698 புள்ளிகளுடன் 15-வது இடத்திலும், முரளி விஜய் 28-வது இடத்திலும், தவான் 29-வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் ஷர்மா 46-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 891 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 880 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அஷ்வின் 849 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், அஷ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர், முதல் இடத்தில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் உள்ளார்.

சிறந்த டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. 125 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 111 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இலங்கை தொடர் முடிந்த பிறகு, அடுத்து இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்திய அணியின் உண்மையான சோதனை இதுவாகத் தான் இருக்கும்.

(பின் குறிப்பு: ஒரு பேட்ஸ்மேன் 40 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய பிறகு தான் ஐசிசி-யின் முழு தரவரிசை பட்டியலில் இடம் பெற தகுதி பெறுகிறார். அதேபோல், ஒரு பவுலர் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தும் போது தான் தரவரிசை பட்டியலில் இடம் பெற தகுதி பெறுகிறார்).

Virat Kohli Icc Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment