கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தான் மறைத்து வைத்திருந்த மர்மப் பொருள் கொண்டு, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்றார் போல் பந்தை சேதப்படுத்தினர். இதை அப்படியே கேமரா படம் பிடிக்க, "What the f*** is going on? Find out what the f*** is going on?" என்று பயிற்சியாளர் லீமன் ஆத்திரப்பட, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.
அதன்பின், துணை கேப்டன் வார்னரின் ஐடியாவோடு, கேப்டன் ஸ்மித்தின் துணையோடு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. ஸ்மித்துக்கும், வார்னருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க, சீனியர்கள் தவறு செய்ய சொன்னதை ஒப்புக்கொண்டு செய்த இளம் வீரர் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு பிறகு ஸ்மித் செய்தியாளர்களிடம் கதறி அழுத ஸ்மித், "என் மீது அதிருப்தியும், கோபமும் கொண்டுள்ள எனது அணியின் சக வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் மற்றும் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, 'என்னை மன்னித்துவிடுங்கள்!'. நான் செய்த தவறையும், அதனால் ஏற்பட்ட விளைவையும் நான் நிச்சயம் மாற்றுவேன்.
இந்த சம்பவம் மூலம் ஒரு நல்லது நடந்திருக்குமெனில், மற்றவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கிடைத்துள்ளது. நானும் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நினைத்து என் வாழ்க்கை முழுவதும் நான் வருத்தப்படுவேன் என்பது எனக்கு தெரியும். நாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நான் இழந்த மரியாதையையும், மன்னிப்பையும் பெறுவேன்.
இந்த சம்பவத்திற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்கிற முறையில், அனைத்திற்கும் நான்தான் பொறுப்பு. உலகில் கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விளையாட்டு. இதுதான் எனது வாழ்க்கை. எனக்கு மீண்டும் அது கிடைக்கும் என நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் முற்றிலும் அழிந்துவிட்டேன்" என்று உருக்கமாக பேசினார்.
செய்தியாளர்கள் முன்பு உரையாற்றும் போது, ஸ்மித் அடிக்கடி பேச முடியாமல், சிறு பிள்ளையைப் போன்று கண்ணீர்விட்டு அழுதார்.
இந்நிலையில், தடை அமலில் இருக்கும் நேரத்தில் கனடாவில் நடக்கும் டி20 தொடரில் ஸ்மித் கலந்து கொண்டுள்ளார். அதில், டேரன் சமி தலைமையிலான டொராண்டோ நேஷ்னல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஸ்மித், இன்று நடைபெற உள்ள, கிறிஸ் கெயில் தலைமையிலான வேன்கோவர் நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்குகிறார்.
சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்த ஸ்மித், இன்று மீண்டும் பேட்டுடன் களமிறங்க உள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்திடம் அடி மேல் அடி வாங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஸ்மித் மீண்டும் களமிறங்குவது உற்சாகத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். கனடா டி20 தொடரில், ஸ்மித் சிறப்பாக ஆடும் பட்சத்தில், அது ஜுலை 1ம் தேதி தொடங்கும் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.