முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், அதிரடி தொடக்க வீரருமான வீரேந்திர சேவாக், டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "சவுரவ் கங்குலி, தான் பேட்டிங் செய்யும் இடத்தை தோனிக்காக தியாகம் செய்ததால் தான், தோனி இன்று மிகப்பெரிய வீரராக உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "அப்பொழுது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். அதன் ஒரு யோசனையாக, இந்திய அணிக்கு தொடக்கம் நன்றாக இருந்தால், மூன்றாவது வீரராக கங்குலி இறங்க வேண்டும். ஒருவேளை, தொடக்கம் சரியாக அமையவில்லை எனில், அதிரடியாக ஆடக் கூடிய இர்ஃபான் பதான் அல்லது தோனி ஆகிய இருவரில் ஒருவரை 3-வது வீரராக களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அதன்படி, மூன்றாவது வீரராக தோனியை களமிறக்க கங்குலி முடிவு செய்து, அதன்படி மூன்று அல்லது நான்கு ஆட்டங்களுக்கு தோனிக்கு அந்த வாய்ப்பை அளித்தார்.
கங்குலியைப் போன்று சில கேப்டன்களே, இது போன்று முடிவுகளை எடுப்பார்கள். அதிலும், கங்குலி இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்க விரும்புபவர். கங்குலி, தனது பேட்டிங் இடத்தை தோனிக்கு விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால், தோனி இன்று மிகப்பெரிய வீரராக உருவாகி இருக்கமாட்டார்.
கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, புதிய கேப்டனாக டிராவிட் பொறுப்பேற்றார். அவரும், தோனியை சிறந்த ஃபினிஷராக ஆக்குவதில் அதிக முனைப்புடன் இருந்தார்.
டிராவிட் தலைமையில் விளையாடுகையில், இருமுறை தோனி தவறான ஷாட்களால் போட்டியை வெற்றியுடன் முடிக்க தவறிவிட்டார். இருப்பினும், தோனிக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட தோனி, தனது ஆட்ட முறையை முற்றிலும் மாற்றிக் கொண்டு, மிகச் சிறந்த ஃபினிஷராக அணியில் உருவெடுத்தார். யுவராஜுடன் இணைந்து தோனி அணியை வெற்றிப் பெற வைத்ததெல்லாம் மறக்க முடியாத நிகழ்வாகும்" என்றார்.