மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது. அப்படியே தென்னாப்பிரிக்க அணி ஸ்கோர் போர்டை நாம் ஸ்க்ரோல் செய்து பார்த்த போது, நம் கண்களில் திடீரென தென்பட்டது 'த்ரிஷா' எனும் பெயர். உடனே கண்களுக்கு சடன் பிரேக் போட்டு, ஆச்சர்ய விழிகளுடன் அந்த பெயரை நாம் ஆராய்ந்த போது, த்ரிஷா ஷெட்டி என்று தெரியவந்தது. அட நம்ம நாட்டு பேருல தென்னாப்பிரிக்கா அணியில் ஒரு வீராங்கனையா என மேலும் ஆராய்ந்த போது, நமக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் சிக்கின.
தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக உள்ளவர் தான் த்ரிஷா ஷெட்டி. கீப்பிங்கில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச விக்கெட் இதுவாகும். அரையிறுதியில் தோற்று உலகக்கோப்பையில் இருந்து வெளியேறினாலும், இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை த்ரிஷா தான்! இதில் சுவராஸ்யமே இவர் ஒரு தமிழச்சி என்பதுதான்.
இதுகுறித்து த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், "ஆமா. நான் தென்னாப்பிரிக்கா டர்பன்ல பிறந்து வளர்ந்தாலும் எங்க பூர்வீகம் மெட்ராஸ். அம்மா அப்படித்தான் சொன்னாங்க. இன்னும் எங்க சொந்தக்காரங்க மெட்ராஸ்ல இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க. அவங்களை பார்க்கும் ஆசை எனக்கு இருக்கு. இப்பவும் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவோட விளையாடினா, நான் தென்னாப்பிரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணுவேன். பட்! மற்ற அணிகளோட விளையாடினா, இந்தியாவுக்குத்தான் என் முழு ஆதரவு" என்று புன்னகைக்கிறார் த்ரிஷா.
’நான் இந்திய ஆர்ஜின்ங்கறதுல எனக்கு பெருமைதான்’ என்கிற த்ரிஷா, 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துவிட்டார்.
மேலும் அவர் கூறும் போது, "சின்ன வயசுல ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் பண்றதை ரசிப்பேன். அவரைப் போல எனக்கும் துள்ளிக்குதிச்சு சிறப்பாக பீல்டிங் பண்ணணுங்கற ஆசை இருக்கும். அதையே ஆரம்பத்துல ஃபாலோ செய்தேன். அதேசமயம், விக்கெட் கீப்பிங்னா மார்க் பவுச்சர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அவரை போல கீப்பிங் பண்ணணுங்கறது என் ஆசை" என்றார்.
முன்னதாக, அணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக, த்ரிஷாவை 3 மாதம் சஸ்பெண்ட் செய்திருந்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம். மீண்டும் அணிக்கு திரும்பிய த்ரிஷாவை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கி இருக்கிறது அந்த அணி. அதற்கு முன்புவரை ஏழாவது இடத்தில்தான் இறந்குவாராம்.
"உலகின் சிறந்த விக்கெட் கீப்பரா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, என் சாதனை குறைவுதான். மற்றவர்கள் பண்ண முடியாத ஒரு சாதனையை செய்யணும். அதை இன்னும் நான் பண்ணல. பண்ணுவேன்னு நினைக்கிறேன்" என்கிறார் த்ரிஷா ஷெட்டி.