ANBARASAN GNANAMANI
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது இந்தியா. இது உள்ளபடி மகிழ்ச்சி செய்தி தான்!. இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இதுநாள் வரை நம் காதுகள் இப்படியொரு வார்த்தைகளை கேட்டதே கிடையாது.
உலகக் கோப்பையை கூட இரண்டு முறை வென்றுவிட்டோம், டி20 கோப்பையை வென்றுவிட்டோம், சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றிவிட்டோம். இவ்வளவு ஏன், ஆஸ்திரேலியாவில் கூட அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுவிட்டோம். ஆனால், தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை.
டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் என ஒன்றை கூட இந்தியா அங்கு கைப்பற்றவில்லை. முதன்முறையாக, இந்த சாதனையைப் படைக்க தற்போது காலம் கணிந்துள்ளது. இன்னும் ஒரு போட்டியை வென்றால், ஒருநாள் தொடரை இந்தியா முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கைப்பற்றிவிடும். அதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகமாகவே உள்ளது. இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக இருந்த கேப்டன் கோலிக்கு நமது வாழ்த்துகள். இரட்டை ஸ்பின்னர்கள் என சமீப காலமாக அழைக்கப்படும் 'குல்தீப் - சாஹல்' இணைக்கும் நமது வாழ்த்துகள். இவர்கள் மூவரால் தான் மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.
அதேசமயம், தென்னாப்பிரிக்க அணிக்கும்... சாரி! தென்னாப்பரிக்கா 'பி' அணிக்கும் வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டியது நமது கடமை என நினைக்கத் தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க கேப்டனாக உள்ள 23 வயதான மார்க்ரம், அறிமுக விக்கெட் கீப்பர் க்ளாசீன், அறிமுக ஃபேஸ் பவுலர் லுங்கிசனி ங்கிடி, மிடில் ஆர்டரில் காயா சோன்டோ, 21 வயதான ஆல் ரவுண்டர் ஃபெலுக்வாயோ ஆகியோர் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை வேறு எவ்வாறு அழைப்பது..?
டோட்டல் ஃபார்ம் அவுட்டில் உள்ள ஆம்லாவும், இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சீனியர் வீரர்களான டுமினி, மில்லர் ஆகியோரும் போராடிக் கொண்டிருக்க, முன் பத்தியில் சொன்ன இளம் வீரர்களால் என்ன செய்ய முடியும்? எனவே, அட்லீஸ்ட் அவர்களை பாராட்டுவதே சிறந்தது.
மிக மெதுவாக பந்துவீசும் சாஹல் - குல்தீப் இணையால் தென்னாப்பிரிக்கா நிலை குலைந்து போயுள்ளது. இனி இழப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. தவறுகளை திருத்திக் கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் முன்னேற்றம் காணவே தென்.ஆ. நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும்.
அடுத்த இலங்கையாக மாறிவிடாமல், தகுதியான வீரர்களை உடனடியாக கண்டறிய வேண்டிய சூழலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி உள்ளது.
இருப்பினும், இந்தியாவுக்கும் ஒரு எச்சரிக்கை மணி கண்டிப்பாக அடித்தாக வேண்டும். இரண்டாம் ஒருநாள் போட்டி முடிந்த பிறகு கூட, 'ரஹானேவுக்கு அடுத்தபடியாக இறங்கும் தோனி, கேதர் ஜாதவ், பாண்ட்யா ஆகியோரின் செயல்பாடு மிக முக்கியம். அவர்களது ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என தெரியவில்லை. கோலி இதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என நாம் தெரிவித்து இருந்தோம்.
அதை நிரூபிக்கும் வகையில், நேற்றைய மூன்றாவது போட்டியில் மூவரும் செயல்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
பாண்ட்யா - 14, தோனி - 10, பாண்ட்யா - 1.
நேற்று போட்டி முடிந்த பின், பரிசளிப்பு நிகழ்வின் போது, ஆட்ட நாயகன் விருதை வென்ற விராட் கோலியை பேட்டி கண்ட முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக், "உங்களுக்கு இப்போதெல்லாம் சதமெடுப்பது ஒரு பழக்கமாகிவிட்டதல்லவா?" என்று கோலியைப் பார்த்து தனது பேச்சை தொடங்கினார்.
இது கோலிக்கான பாராட்டாக நாம் எடுத்துக் கொண்டாலும், 'உங்களைத் தவிர வேறு யாருமே அடிப்பதில்லை போலவே?' என்று மாற்றி யோசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதை முக்கியமாக கோலி உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வீரராக தனது திறமையை ஒவ்வொரு முறையும் கோலி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அதேசமயம், ஒரு கேப்டனாக மற்ற வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்.
அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவனை முதல் ரேங்க் எடுக்க வைப்பது பெரிய விஷயமல்ல, சுமாரான மாணவனை முதல் ரேங்க் எடுக்க வைப்பதே பெரிய விஷயம். சாஹல் - குல்தீப் மட்டும் போதும் என நினைத்தால், ஒவ்வொருமுறையும் வெற்றி கிட்டாது. அதாவது, தொடர்ச்சியாக வெளி மண்ணில் சொதப்பும் ரோஹித்தை இன்னும் நன்கு கவனிக்க வேண்டிய கடமை கோலிக்கு உள்ளது. அதேபோன்று, பாண்ட்யாவிற்கு சீரியஸ் தன்மையை உணர வைக்க வேண்டிய முக்கிய பொறுப்பும் கோலிக்கு உள்ளது. கேதர் ஜாதவ் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் ஒரு நல்ல டி20 வீரராக இருக்க முடியும் என தோன்றுகிறது. இருப்பினும், அவரது ஸ்பின் பவுலிங்கிற்காக இத்தொடரில் அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பதை உணர முடிகிறது. தோனி.... தனது நிலை என்ன என்பதில் எப்போதும் அவர் தெளிவாகவே இருப்பவர். எனவே, தோனியை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தனிப்பட்ட வீரரால் அணி வெற்றிப் பெறுவதை விட, ஒரு அணியாக வெல்ல வேண்டும் என்பதை கோலி உணர்ந்திருப்பாராயின் அது நல்ல விஷயம். உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றிப் பெற முடியும். அதேசமயம், அணியின் மூத்த வீரர்களும், சீரியஸ் தன்மையை உணர்ந்து விளையாடி கோலிக்கு கைக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், சச்சின் காலம் மீண்டும் திரும்புவதை யாராலும் தடுக்க முடியாது.
இருப்பினும், கோலி & டீமுக்கு வாழ்த்துகள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.