இந்திய சீனியர் அணியைப் பற்றி சொல்லவில்லை... அண்டர் 19 அணிக்குத் தான் இப்படியொரு வாய்ப்பு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி, தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பைத் கிரிக்கெட் தொடரில், அனைவரும் வியக்கத்தக்க வகையில் ஆடி வருகிறது. முதல் போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இரண்டாம் போட்டியில் பப்பு நியூ கினியா அணியையும், மூன்றாம் போட்டியில் ஜிம்பாப்வே அணியையும் 10 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் பந்தாடி உள்ளது.
'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வென்று, 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ப்ரித்வி ஷா சிறப்பாக செயல்பட, மற்ற வீரர்கள் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு, தங்கள் திறமையை நிரூபித்து வருவதில், ராகுல் டிராவிட்டின் அணித் தயாரிப்பை தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது.
குறிப்பாக, பஞ்சாபை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ஷுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் அண்டர் 19 பிரிவில், உலகிலேயே அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் வீரராக வலம் வருகிறார்.
Shubman Gill
இவரது ஆவரேஜ் 103.33. இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் ஆடியிருக்கும் ஷுப்மன் கில், 930 ரன்களை குவித்துள்ளார். 78, 70, 29, 24, 138*, 160, 27, 38*, 147, 66, 63, 90*. இதில் 3 சதங்களும், ஐந்து அரைசதங்களும் அடங்கும்.
இவருக்கு அடுத்தபடியாக, தற்போதைய இந்திய சீனியர் அணியில் விளையாடும் புஜாரா 76.75ம், உன்முக்த் சந்த் 67.58ம் ஆவரேஜ் வைத்துள்ளனர்.
மற்றொரு கவனிக்கப்படும் வீரராக அணியில் வலம் வருபவர், வலது கை வேகப்பந்து வீச்சாளர் கம்லேஷ் நாகர்கோட்டி. நியூசிலாந்து பிட்சில் மணிக்கு 149கி.மீ வேகத்தில் பந்து வீசி, இந்திய சீனியர் பவுலர்களையே மிரள வைத்துள்ளார் இந்த 'பவுலிங் பாகுபலி'.
ஏதோ ஒரு பந்தை வேகமாக வீசுவது பெரிய விஷயம் அல்ல. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் 37வது ஓவரில், அனைத்து பந்துகளையும், மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு மேல் வீசியுள்ளார். இதுதான் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் முதல் அடையாளம். நமது சீனியர் அணியில் உள்ள பவுலர்கள் எல்லாம் மித வேகப் பந்து வீச்சாளர்களே. ஆனால், நாகர்கோட்டி பக்கா வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார்.
Kamlesh Nagarkoti
இதைத் தான் முன்னாள் கேப்டன் கங்குலியும் வலியுறுத்தி உள்ளார். அவர், விராட் கோலி, பிசிசிஐ-யை ட்விட்டரில் டேக் செய்து, நாகர்கோட்டி மீது பார்வை வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரைப் போன்ற பவுலர்கள் தான் அணிக்குத் தேவை.
இங்கு ஒரு விஷயத்தை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது. ராகுல் டிராவிட்டின் அயராத உழைப்பு இந்த உலகக் கோப்பைத் தொடரில் அபரிதமாக உள்ளது. வீரர்களை அவர் ஊக்குவிக்கும் விதமும், அணியின் ஒற்றுமையை அருகில் இருந்து வலிமையாக்கும் விதமும் 'செம' ரகம்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/a151-300x217.jpg)
கடந்த 2016ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பையை, ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் நழுவவிட்டது. ஆனால், இம்முறை அதே ராகுல் டிராவிட்டுக்கு கோப்பையை வென்றுத் தருவதில் முனைப்புடன் உள்ளனர் இந்திய ஜூனியர் பாய்ஸ்.
வாழ்த்துகள் டீம் அண்டர் 19 இந்தியா!.