இம்முறை 'கப்' எங்களுக்கு வேண்டும்! இலக்கை நோக்கி கிங்ஸ் XI பஞ்சாப்

மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், மாயன்க் அகர்வால் ஆகியோர் எதிரணிகளுக்கு துருப்புச் சீட்டுகளாக இருக்கப் போகின்றனர்

‘ஒவ்வொரு நாளும்; ஒவ்வொரு நிமிஷமும்; ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனவன்’-னு தல அஜித் சொன்ன டயலாக் மிகச் சிறப்பாக பொருந்த கூடிய நபர், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தான்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஏலத்தின் போது, மிக மிக சீரியஸாக தனது அணியை பார்த்து பார்த்து ப்ரீத்தி செதுக்கியுள்ளார் என்றே கூற வேண்டும். இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணிகளின் பட்டியலில் ஏக்கத்துடன் உள்ள அணிகளில் இதுவும் ஒன்று. ஆகையால், இம்முறை சவால் கடுமையாக அளிக்க வேண்டும் என்று ஆற அமர வீரர்களை தேர்வு செய்துள்ளது பஞ்சாப் நிர்வாகம்.

சேவாக் தான் அணியின் தலைமை கோச். பேச்சை விட வீச்சு தான் இவரது ஸ்டைல். அதையே தனது கோச்சிங்கில் கடைபிடித்தும் வந்தார். ஆனால், என்ன காரணமோ, ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜை தலைமை பயிற்சியாளராக நியமித்தது பஞ்சாப் நிர்வாகம். சேவாக்கை, பஞ்சாப் அணியின் ஆலோசகராக நியமித்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரேஸிலும் சேவாக் நிராகரிக்கப்பட்டது தனிக்கதை.

ஆக இந்தாண்டு, பிராட் ஹாட்ஜ் பயிற்சியில், ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையின் கீழ் முதன் முதலாக களமிறங்குகிறது பஞ்சாப் அணி.

லோகேஷ் ராகுல், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், கிரிஸ் கெயில், மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், கருண் நாயர், மனோஜ் திவாரி, மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் என தரம் வாய்ந்த வீரர்களாக அள்ளி வீசியுள்ளது பஞ்சாப். குறிப்பாக, ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக யாரை களமிறக்கலாம் என தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது பஞ்சாப்.

லோகேஷ், பின்ச், கெயில், மாயன்க் அகர்வால் என இவர்கள் நால்வரும் சிறந்த ஒப்பனர்கள் தான். இருப்பினும், கெயில், பின்ச்சிற்கு அந்த வாய்ப்பு அதிகம் உள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரை இந்த அணி பலமாக தான் உள்ளது. ஆனால், கரண்ட் பார்ம் என்பது இங்கு மிக முக்கியம். கெயில், யுவராஜ், மில்லர் போன்றோர்களின் பார்ம் எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்போதே கணிப்பது கடினம். தொடக்கப் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே, பஞ்சாப் எந்த மாதிரியான பலமான அணி என்பதை சொல்ல முடியும். லோகேஷ் ராகுல் கொஞ்சம் பதட்டமும், பயமும் இல்லாமல் ஆடினால் மிரட்டலாம்.

ஆனால், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், மாயன்க் அகர்வால் ஆகியோர் எதிரணிகளுக்கு துருப்புச் சீட்டுகளாக இருக்கப் போகின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் கேப்டன் அஷ்வின் செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை, மோஹித் ஷர்மா ஆகியோர் பிரதான வேகப் பந்து வீச்சாளர்களாக உள்ளனர். அஷ்வின், அக்ஷர் படேல் ஆகியோர் முக்கிய ஸ்பின்னர்கள். இவர்களைத் தவிர பெரும்பாலும் இளம் பவுலர்களாக உள்ளனர். ஐபிஎல்-லில் இப்போது தான் அவர்கள் முதன் முதலாக விளையாடுகின்றனர்.

எனவே, பஞ்சாப் பேட்டிங்கை விட பவுலிங்கில் வீக்காக தான் உள்ளது. ஆனால், இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு பவுலர். ஆகையால், அவர் சாமர்த்தியமாக இந்தப் பிரச்னையை சமாளிப்பார் என்று தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, பஞ்சாப் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், சில இடங்களில் சறுக்குகிறது. அதனால், அவர்களது பெர்பாமன்ஸ் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஐபிஎல் ஆரம்பித்த பின்னர் தான் கூற முடியும் என்பது நமது கணிப்பு.

ஆனால், கடந்த ஆண்டு விளையாடிய பஞ்சாப் அணியை விட, இப்போது பஞ்சாப் பலமாக, மெச்சூரிட்டியுடன் உள்ளது என்பது உண்மை.

×Close
×Close