நேற்று (ஞாயிறு) நடந்த ராஜஸ்தான் vs மும்பை மேட்சை, இரவு 11 மணிக்கு மேல் பெரும்பாலான ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மும்பை நிர்ணயத்த 168 ரன்கள் இலக்கை, சேஸிங் செய்துகொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 17.1 ஓவரில் 125-6. களத்தில் நிற்பது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கிருஷ்ணப்பா கெளதம். இவ்விரு பெயர்களை பார்த்தவுடன் பல வீடுகளில் டிவிக்கள் ஆஃப் மோடுக்கு சென்றுவிட்டது. ஆனால், மறுநாள் காலை விடிந்து, கேஷுவலா ஃபேஸ்புக்கை பார்க்கும் போது, எங்கு பார்த்தாலும் கிருஷ்ணப்பா கெளதம் எனும் பெயர். என்னடா இது-ன்னு கன்ஃபியூஷனோடு ஸ்கோர் போர்டை பார்த்தால், ராஜஸ்தான் 19.4 ஓவரில் 168 ரன்கள் எடுத்து வெற்றி-ன்னு இருக்கு. கண்கள் அகல விரிய, ஸ்கோர் போர்டை உற்றுப் பார்த்தால் கிருஷ்ணப்பா கெளதம் 11 பந்தில் 33 ரன்கள்-னு இருக்க, ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு!. 4 பவுண்டரி, 2 சிக்சர்கள். ஸ்டிரைக் ரேட் 300.00.
சே! ஒரு நல்ல மேட்சை மிஸ் செய்துட்டோமே என ரசிகர்கள் அனைவரையும் நினைக்க வைத்துவிட்டார் கர்நாடகாவைச் சேர்ந்த இந்த 29 வயது வீரர் கிருஷ்ணப்பா கெளதம். மேட்ச் கையைவிட்டு போச்சோ-னு ராஜஸ்தான் நிர்வாகம் கவலையில் இருக்க, 6.2 கோடிக்கு ஏலத்தில் தன்னை எடுத்ததை சரியென நிரூபித்து, ராஜஸ்தான் அணி நிர்வாகத்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டார் இவர். ஆம்! ஏலத்தின் போது இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம். ஆனால், பல அணிகள் போட்டிப் போட, ராஜஸ்தான் அணி இவரை 6.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
யார் இந்த கிருஷ்ணப்பா கெளதம்?
கர்நாடகாவைச் சேர்ந்த இந்த வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர், அண்டர் 15 கிரிக்கெட் தொடரில், இரண்டாவது அதிகபட்ச விக்கெட் டேக்கராக விளங்கி, முதன் முதலில் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தார். அதன்பின், 2012ம் ஆண்டு, கர்நாடக அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கினார். தனது முதல் போட்டியிலேயே, இரண்டு இன்னிங்ஸிலும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, தனது தேர்வை நியாயப்படுத்தினார். இதன்பின் 2016-17 ரஞ்சி சீசனில், டெல்லி மற்றும் அசாம் அணிக்கெதிரான போட்டியில், தொடர்ச்சியாக இருமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி, 2017-18 ரஞ்சி சீசனில், அசாம் அணிக்கெதிரான ஆட்டத்தில் தனது முதல் ரஞ்சி சதத்தை விளாசினார்.
இவரது பெஸ்ட் பவுலிங் 108/7. இவரது ஆல்-ரவுண்டர் பெர்பாமன்ஸ் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 2017 ஐபிஎல் சீசனில் 2 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் கூட இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுவரை 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கெளதம் 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டீசன்ட் எகானமி வைத்துள்ளார். 7.06. தவிர, லோயர் ஆர்டரில் பேட் செய்யும் இவரது ஸ்டிரைக் ரேட் 159.79. இரண்டு அரை சதங்கள் விளாசியுள்ளார். ஒட்டுமொத்தமாக 579 ரன்கள் எடுத்துள்ளார். ஆவரேஜ் 28.95.
எந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடாமல் உட்கார வைக்கப்பட்டாரோ, நேற்று அதே அணிக்கு எதிராக 11 பந்தில் 33 ரன்கள் விளாசி, ராஜஸ்தான் அணியை வெற்றிப் பெற வைத்துள்ளார்.
அது சரி… தலைப்புல எதுக்கு வாஷிங்டன் சுந்தரை இழுத்தீங்க?-னு தான கேட்குறீங்க? ஏன்னா, அவரும் கௌதமை போல மரண ஆல் ரவுண்டர் தாங்க. தமிழ்நாடு பிரீமியர் லீக்-ல நம்ம சுந்தர் செஞ்சுரிலாம் விளாசி இருக்கார்-னா பார்த்துக்கோங்க. விராட் கோலியின் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தருக்கான அந்த ஒரு சிறப்பான நாள் மட்டும் இந்த ஐபிஎல் தொடரில் அமைந்துவிட்டால், நிச்சயம் இந்திய அணியில் அவருக்கென்று ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் விராட் கோலி கேப்டன்ஷிப்பில் விளையாடுவதால், அவர் கண் முன்னே அந்த நாள் அமைந்தால், தமிழகத்தில் இருந்து மற்றொரு ஸ்டிராங்கான வீரர் இந்திய அணியில் தனது இடத்தை சிமெண்ட் பூசி உறுதி செய்வது உறுதி!.
ஒரு கிரிக்கெட் ரசிகனாக, பவுலிங் ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கெளதம் சாதித்ததை கொண்டாடுவது போன்று, ஒரு தமிழக ரசிகனாக பவுலிங் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கும் அப்படி ஒரு மேட்ச் அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.