இந்த உலகில் ஒருவன் எப்பேற்பட்ட சாதனைகளை செய்தாலும், எப்போது அவன் தவறிழைப்பான், எப்போது அவனை தூற்றலாம் என்று இந்த உலகமே காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அந்த தவறுகளை மீண்டும் அவன் சாதனையாக மாற்றும் பட்சத்தில் அவனை வாழ்த்த இவ்வுலகம் அதிகம் விரும்புவதில்லை. இது உலக நியதி.
இந்த உலக நியதியில் இன்று சிக்கியிருப்பவர் மகேந்திர சிங் தோனி. ஜார்கண்ட் எனும் ஒரு வளர்ச்சி பெறாத மாநிலத்தில் இருந்து, ஒரு லோ மிடிக் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து இன்று பேரும் புகழும் பெற்றவர் இந்த தோனி.
அன்று உலகக்கோப்பையை பெற்றுத் தந்த போதும், தேவைப்படும் போதெல்லாம் தூண் போன்று நின்று, அணியை வெற்றிப்பெற வைத்த போதும் ஒரு வீரனாகவும், கேப்டனாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டவர் இன்று ஏதோ ஒரு சாதாரண கிரிக்கெட் வீரரைப் போல வந்து விளையாடிவிட்டு செல்கிறார். கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியவுடன், தோனி மீது விழும் குறைகள், விமர்சனங்கள் ஏராளம். ஆனால், அவையனைத்தையும் மீறி அவர் சிறப்பாக விளையாடும் போதும், பாராட்டு என்பது ஏனோ அனைவரிடமிருந்தும் நிராகரிக்கப்படுகிறது.
ஒரு கேப்டனாக இடையில் நிறைய சறுக்கல்களையும், தோல்விகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது உண்மை தான். ஆனால், பெரும்பாலான ஆட்டங்களில் ஒரு தனி வீரராக அவர் தோற்றதில்லை. அணியையும் தோற்க விட்டதில்லை. அதற்காக தான் இன்னமும் அவர் அணியில் நீடிக்கப்படுகிறார் என்பதும் உண்மையே. இல்லையெனில், இந்நேரம் அவர் அணியில் இருந்தே நீக்கப்பட்டிருப்பார்.
'பழைய சாதனைகளை வைத்துக் கொண்டு இன்னமும் தோனி அணியில் நீடிக்க முடியாது' என்று தற்போது நடைபெற்று வரும் இலங்கைத் தொடருக்கு முன்பாக பேசிய சிலரின் பேச்சுக்கும், எண்ணங்களுக்கும், தற்போது தனது பேட்டின் மூலம் மிகச்சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.டி.
இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 130 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்தது. களத்தில் நிற்கும் ஒரே நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன் தோனி மட்டுமே. ஆனால், இலக்கை தொட இன்னும் 100 ரன்கள் தேவை. தனஞ்செயா எனும் இளம் பந்துவீச்சாளரின் கூக்ளி, தூஸ்ரா சுழலில், மாடர்ன் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்படும் விராட் கோலி உட்பட பலரும் தனது ஸ்டம்புகளை தாரை வார்த்தனர்.
ஆனால், இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கிய தோனி, பெரும் சூறாவளியிலும் கப்பலை மூழ்கவிடாமல் காக்கும் நங்கூரத்தைப் போல நிலைத்து நின்று அணியைக் காப்பாற்றினார். அப்போது அவருக்கு பக்கபலமாக ஆடிய புவனேஷ் குமாரிடம் தோனி கூறியது என்ன தெரியுமா? 'டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று விளையாடு. நம்மால் வெல்ல முடியும்' என்பதே. இதனை நன்கு உள்வாங்கிக் கொண்ட புவனேஷ் நிலைத்து நின்று ஆடி, அரைசதம் அடித்து அணி வெற்றிப் பெற உதவினார்.
இங்கு தான், தோனி தான் யார் என்பதை நம்மை உணர வைக்கிறார். அவர் புவனேஷுக்கு சொன்ன அட்வைஸ் முக்கியம் அல்ல. மெல்ல மெல்ல புவனேஷ் அதிரடியாக விளையாட ஆரம்பித்த போது அவரை ஊக்குவித்து, ஒருநாள் போட்டிகளில் அவரை முதல் அரைசதம் அடிக்கவிட்டு பார்த்து ரசித்தார். இதுதான் முக்கியமான விஷயமே. "உலகின் 'பெஸ்ட் ஃபினிஷர்' என்று அழைக்கப்படும் நான் அடிக்காமல், ஒரு பவுலர் அடித்து அணி வெற்றிப் பெறுவதா?" என தோனி கொஞ்சம் நினைத்திருந்தாலும் நிச்சயம் இந்தியா தோற்றிருக்கும். ஆனால், ஈகோ பார்க்காமல், சுயநலம் பார்க்காமல், எதிரில் அமைதியாக நின்றுக் கொண்டு ஒரு பவுலரை அடிக்க வைத்து அழகு பார்த்த தோனி போன்று, இனி ஒரு வீரனோ, கேப்டனோ இந்திய அணிக்கு கிடைப்பாரா? அதே 7 விக்கெட்டுடன் இந்திய அணியை வெல்ல வைத்தது ஒரு சாதாரண காரியமா?
மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், 218 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 61-4 என்றிருந்த போது, மீண்டும் அணியைக் காப்பாற்றியவர் தோனி மட்டுமே. ரோஹித் ஷர்மா சதம் அடித்தாலும், அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் தோனி மட்டுமே. அதனால் தானே ரோஹித் பதட்டப்படாமல் விளையாட முடிந்தது. சதம் அடிக்கவும் முடிந்தது. இறுதியில் தானும் அரைசதம் விளாசி அதே 4 விக்கெட் வீழ்ச்சியுடன் இந்தியாவை வெற்றிப் பெற வைத்தார்.
'அடுத்த உலகக்கோப்பை வரை தோனி அணியில் நீடிக்க வேண்டுமா?' என்று கேட்டவர்களுக்கு நேற்று தோனி அடித்த அரைசதம் ஒரு எச்சரிக்கை அலாரம். தன்னைப் பற்றி இனியும் அவர்கள் வாயைத் திறக்க யோசிக்க வைத்துவிட்டார் தோனி.
'தோனி இனியும் அணிக்கு வேண்டுமா?' என்று ஓர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கோச் கேரி கிர்ஸ்டன் அளித்த பதில் இது. "தோனியை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள், தோனிக்கு சரியான மாற்று வீரர் ஒருவரையாவது அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம். தோனி போன்று ஒரு பெஸ்ட் ஃபினிஷரை காட்டுங்கள் பார்ப்போம். முதலில் தோனி அளவிற்கு திறமையுடைய ஒரு மாற்று வீரரை கண்டறிந்து அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து உருவாக்குங்கள். அதற்கு பிறகு தோனி நீக்கம் பற்றி பேசலாம்" என்றார்.
ஆஸ்திரேலியாவில் 2015-ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை தொடரின் போது 'உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதே. நீங்கள் சென்று பார்க்கவில்லையா?' என்று தோனியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "குழந்தை பிறந்ததில் மகிழ்ச்சி. நான் இப்போது நாட்டுப் பணியில் இருக்கிறேன். இதுதான் இப்போது எனக்கு முக்கியம். என் குழந்தை நன்றாக இருப்பாள்" என்று கூறிய தோனி போல் இனிவொரு கேப்டன் இந்திய அணிக்கு பிறந்து தான் வர வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.