அஜெண்டாவை மீறுகிறதா முத்தரப்பு டி20 தொடர்? சேனல் மீது கடுப்பில் இருக்கும் ஐசிசி!

டி ஸ்போர்ட்ஸ் சேனல் அதிக அளவிலான விளம்பரங்களை ஒளிபரப்புவதை, ஐசிசி உன்னிப்பாக கவனித்து வருகிறது

ANBARASAN GNANAMANI

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 தொடர் தற்போது இலங்கையின் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ‘நிடாஹஸ் டிராபி’ என்று அழைக்கப்படுவது நமக்கு தெரிந்த ஒன்றே. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாகவே இத்தொடர் நடத்தப்படுகிறது. சிங்கள மொழியில் ‘நிடாஹஸ்’ என்றால் ‘சுதந்திரம்’ என்று அர்த்தம்.

இதற்கு முன்னதாக, 1998ம் ஆண்டு, இதேபோன்று ‘நிடாஹஸ் டிராபி’ நடைபெற்றது. இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் அத்தொடர் நடத்தப்பட்டது. அப்போது டி20 போட்டிகள் அறிமுகம் ஆகவில்லை என்பதால், 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட்டது. அதில், இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன.

அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சச்சின் 128 ரன்களும், கங்குலி 108 ரன்களும் விளாசி, முதல் விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தனர். அப்போது, ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையது தான்.

இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து, இலங்கையின் 70வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் விதமாக தற்போது இத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருப்பது ‘D Sport’ நிறுவனம் என்பது போட்டியை காணும் ரசிகர்களுக்கு தெரியும். இது பிரபல ‘டிஸ்கவரி’ சேனலின் அங்கமாகும். டிஸ்கவரி நிறுவனம், விளையாட்டிற்கு என்று கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்த சேனல் தான் ‘டி ஸ்போர்ட்’. இந்த நிலையில், டி ஸ்போர்ட் சேனல், நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில், போட்டிகளின் போது அதிக அளவிலான விளம்பரங்களை ஒளிபரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பொதுவாக, சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் போது, ஒவ்வொரு ஓவருக்குமான இடைவேளை நேரம் அதிகபட்சம் 30 நொடிகள் தான். அதற்குள் விளம்பரங்களை போட்டு முடித்துவிட வேண்டும். சில சமயம் 40 நொடிகள் வரை சில சேனல்கள் இழுப்பதுண்டு. ட்ரிங்க்ஸ் பிரேக் போன்ற சமயங்கள் விதிவிலக்கு.  ஆனால், தற்போது ‘D Sport’ல் ஒளிபரப்பாகும் போட்டிகளின் இடைவேளையின் போது 45-50 நொடிகள் வரை தொடர்ச்சியாக விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களை மிகவும் வெறுப்படைய வைப்பது போன்று அமைந்துள்ளது.

ஐசிசி அஜெண்டாவின் படி, 40 நொடிகள் வரை விளம்பரம் சென்றாலும், ரீ-பிளே, கமெண்ட்ரி, ஆடியன்ஸ் கேமரா வியூ போன்றவை சரியான நேரத்தில் ரசிகர்களுக்கு கிடைத்துவிட வேண்டும். அதை மீறும் பட்சத்தில், ஐசிசி அந்த குறிப்பிட்ட சேனலுக்கான ஒளிபரப்பு உரிமையை அடுத்துமுறை வழங்காது. ஒருவேளை வழங்கினாலும், கடுமையான கண்டிஷன்கள் போடப்படும்.

இந்த நிலையில், டி ஸ்போர்ட் சேனல் அதிக அளவிலான விளம்பரங்களை ஒளிபரப்புவதை, ஐசிசி உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தவிர, இது பிசிசிஐ நடத்தும் தொடர் இல்லை. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் தொடர் என்பதால், இத்தொடரின் மீது பல இலங்கை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி அவர்கள் முடிந்த அளவு சம்பாதித்து விட வேண்டும் என்று நினைப்பதால் தான், அதிகளவிலான விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றது என கூறப்படுகிறது.

×Close
×Close