இந்திய அணியில் இதற்கு முன் இப்படியொரு சாதனையை யாராவது படைத்திருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால், சௌராஷ்டிராவில் இருந்து வந்திருக்கும் 28 வயதான ரவீந்திர ஜடேஜா இதனை நிகழ்த்தி காட்டியுள்ளார். அப்படி என்ன செய்துவிட்டார்? நம்பர்.1 டெஸ்ட் பவுலர் மற்றும் நம்பர்.1 டெஸ்ட் ஆல் ரவுண்டர் எனும் பெயரை பெற்றிக்கும் ஜடேஜா நிகழ்த்தியிருப்பது என்பது பெரிய சாதனை தானே.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது, அவரது முகத்தில் தெரிந்த அந்த வெறி, இன்றும் தொடர்கிறதா? என்றால், ஆம் என்று சொல்லலாம். ஒவ்வொரு முறையும், பந்துவீசிய பின், தனது தீர்க்கமான பார்வையால், பேட்ஸ்மேனை அவர் பார்க்கும் விதமே அதற்கு சாட்சி.
தனது பவுலிங் அடிக்கப்பட்டாலும் சரி, விக்கெட் வீழ்ந்தாலும் சரி அவரின் நிதானம் தவறாத நிலைப்பாடே இன்று அவர் இந்த உயரம் தொட்டிருப்பதற்கான காரணம்.
குறிப்பாக, 2012-13-ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸி., கேப்டன் மைக்கேல் கிளார்க்கை ஆறு இன்னிங்ஸில் ஐந்து முறை காலி செய்தார் ஜடேஜா. அந்தத் தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்திய அணியில் தன்னுடைய இடத்தை சிமென்ட் பூசி உறுதி செய்துக் கொண்டார். ஆனால், இந்த சாதனைகளெல்லாம் ஒரு பவுலராக தான் அவரால் நிகழ்த்தப்பட்டது.
ஆனால், அவரது பேட்டிங்? இதுதான் மிகவும் முக்கியமான கேள்வி. முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், மூன்று முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டும் தான். விவிஎஸ் லக்ஷ்மன், புஜாரா மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகியோர் மட்டுமே இரண்டு முறை முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் எடுத்துள்ளனர். அப்பேற்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர் இந்த 'பேட்ஸ்மேன்' ஜடேஜா.
ஆனால் பாருங்கள், 2015-2016 உள்நாட்டு டெஸ்ட் தொடர் வரை, மொத்தமாகவே ஒரேயொரு டெஸ்ட் அரைசதம் மட்டுமே ஜடேஜா எடுத்திருக்கிறார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இருந்து அதுவரை 12 போட்டிகளில் அவர் ஆடியிருந்தும், அந்த ஒரேயொரு அரைசதம் தான் அவரது பெயரை, டெஸ்ட் ஸ்கோர்போர்டில் உயர்த்திக் காண்பித்தது. 2014-ல் லார்ட்ஸில் 68 ரன்கள் எடுத்திருந்தே அவரது அந்த 'ஒரேயொரு' அரைசதமாகும்.
இதனால், ஜடேஜா உட்பட தேர்வுக் குழு அதிருப்தியில் இருந்த நிலையில், ஒரேயொருவர் மட்டும் ஜடேஜா மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் எம்.எஸ்.தோனி. 'இவன் இந்திய டெஸ்ட் அணிக்கு பயனுள்ள ஆல்-ரவுண்டராக இருப்பான்' என்பதை அவர் உணர்ந்ததோடு மட்டுமில்லாமல், தொடர் வாய்ப்பையும் ஜடேஜாவிற்கு வழங்கினார். அதற்கு சாட்சியாக ஜடேஜா காண்பித்த ரிசல்ட், 12 டெஸ்ட் போட்டிகளில் 364 ரன்கள், 45 விக்கெட்டுகள்.
ஜடேஜாவை அணியில் வைத்திருப்பதா அல்லது நீக்குவதா? என எப்போதும் தேர்வுக் குழுவால் முடிவு செய்துவிடவே முடியாது. ஏனெனில், பேட்டிங்கில் இவர் கை கொடுக்கவில்லை எனில், அதே போட்டியில், தனது பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஃபீல்டிங்கின் மூலம் 20 ரன்களை சேமித்து அணிக்கு தான் ஒரு பயனுள்ள வீரர் என்பதை நிரூபித்துவிடுவார். இதனால் தான் இன்றும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கூட அவர் அணியில் நிலைக்கிறார்.
இந்த ஜடேஜாவிடம் மிகவும் பிடித்ததே தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பதுதான். எண்ணற்ற புதுமுக வீரர்களின் ஆக்கிரமிப்பும், சில போட்டிகளில் தனது சொதப்பலான ஆட்டங்களால் அணியில் இருந்து நீக்கப்பட்டு பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாலும், மைதானத்தின் மீதான அவரின் காந்தப் பார்வை அலைவரிசை மிகக் கடுமையாகவே இருக்கும். இந்த சிக்கலில் இருந்து மீள்வது குறித்தே அவரது எண்ண ஓட்டங்கள் இருக்கும். எண்ணங்கள் எண்ணங்களோடு நின்றுவிடாமல், அதை செயல்படுத்தி அணியிலும் இடம்பிடித்து விடுவார்.
2015-ஆம் ஆண்டு முதல், இந்திய அணி நிர்வாகம் என்ன எதிர்பார்த்ததோ, அதை முழுமையாக நிறைவேற்றி தரும் தந்திரத்தை அல்லது வித்தையை ஜடேஜா அறிந்து கொண்டார் என்றே கூறலாம். அந்தக் காலக்கட்டத்தில் நடந்த தென்னாப்பரிக்க தொடரில் இருந்து, அடுத்த 20 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஏழு அரைசதங்கள் உட்பட 772 ரன்களும், 110 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் 7 முறை ஐந்து விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
அதிலும், கடைசி 10-12 மாதங்களாக, பேட்டிங்கில் ஜடேஜா காட்டி வரும் முன்னேற்றம் என்பது அளப்பரியது. அணிக்கு தேவையான நேரத்தில் நிலைத்து நின்று தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன்பயனாகவே தற்போது டெஸ்ட் பவுலிங் மற்றும் டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இனிவரும் காலங்களிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பு கொடுத்து, எதிரணிகளை குலைநடுங்க வைக்கும் அளவிற்கு உருமாற வேண்டும் இந்த ஜடேஜா என்கிற 'ரவீந்திரசிங் அனிருத்சிங் ஜடேஜா'.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.