ஹேப்பி பர்த்டே 'தாதா' கங்குலி... வீ மிஸ் யூ!

அதுவும், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்தால் கண்கள் இரண்டும் விரிந்த நிலையிலேயே ஒரு மாமாங்கம் இருக்கும்!

மேட்ச் ஃபிக்சிங் எனும் சூறாவளி, இந்திய அணியை சுழட்டி சுழட்டி அடித்த காலம் அது. இந்திய அணியின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருந்த நிலையில், தைரியமாக கேப்டன் பதவி ஏற்றுக் கொண்டவர் சவுரவ் கங்குலி. அந்த நிகழ்வு தான் இந்தியாவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்று, உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை மீண்டும் தலை நிமிர வைத்தவர் என்றால் அது கங்குலி தான்.

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான், கங்குலி தனது முதல் டெஸ்ட் பயணத்தை தொடக்கினார். அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அனைவரது புருவங்களையும் உயர வைத்தார். அதுமட்டுமின்றி தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து, மிக ஸ்ட்ராங்காக அணியில் தனது இருப்பை உறுதி செய்தார். அந்தத் தொடரிலேயே சச்சினுடன் இணைந்து 255 ரன்கள் எடுத்து, அச்சமயத்தில் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் தாதா. உலக பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காம்போவிற்கான அஸ்திவாரத்தை தனது முதல் தொடரிலேயே ஏற்படுத்தினார் கங்குலி.

கோலி, தோனி, கெயில், டி வில்லியர்ஸ் சிக்ஸர்களை பார்த்து பழகிய இன்றைய இளம் தலைமுறைக்கு ‘தாதா’ கங்குலியின் சிக்ஸர்கள் குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பந்துகளை ‘அவுட் ஆஃப் தி ஸ்டேடியம்’ அனுப்புவதில் கில்லி இந்த கங்குலி. அதுவும், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்தால் கண்கள் இரண்டும் விரிந்த நிலையிலேயே ஒரு மாமாங்கம் இருக்கும்! ஜிம்பாப்வே நிர்ணயித்த 197 ரன் டார்கெட்டை, சச்சினும் கங்குலியுமே பிரித்து மேய்ந்தனர். கிரான்ட் பிளவர் வீசிய ஒரு ஓவரில், மூன்று முறை பந்துகளை கூறையின் மீது பறக்கவிட்டார் தாதா. இதுகூட பரவாயில்லை, 2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பந்தினை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார்.

அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தாலே, வெற்றிப் பெறுவது ஆஸ்திரேலியா தான். தன் சொந்த மண்ணில் மற்ற அணிகளை சமாளித்துவிடும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் மட்டும் அடிவாங்கும். ஆனால், கங்குலி தலைமையில் அந்த ஆஸ்திரேலியாவிற்கே இந்தியா சவால் விட்டு கெத்து காட்டியது. அந்த அளவிற்கு அணியை சிறப்பாக்கினார் தாதா. சேவாக், யுவராஜ், கைஃப், ஜாகீர் கான் ஆகிய வீரர்களும் கங்குலிக்கு தோள் கொடுத்தனர். இதனால், உலகின் எந்த அணிக்கும் இந்தியா சவால் விடும் அணியாக மாறியது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக, 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை சொல்லலாம். இந்தியாவில் நடந்த அந்த டெஸ்ட் தொடரில், ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தாதா அண்ட் கோ. வெற்றியாலும், தலைகனத்தாலும் மிதந்து கொண்டிருந்த ஆஸி., அணி இந்த தோல்வியால் அதிர்ந்தே போய்விட்டது. அதேபோல், 2004ம் ஆண்டு ஆஸியில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக தாதாவின் தலைமையில் தான் டிரா செய்தது நம் அணி. அதுமட்டுமின்றி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது டீம் இந்தியா. அத்தொடரில் ஸ்டீவ் வாக், ஜாஹீர் கான் ஓவரில் ஹிட் விக்கெட் ஆனதெல்லாம் மறக்க முடியாத நிகழ்வாகும்.

அதேபோல், இங்கிலாந்து வீரர்களுக்கு, கங்குலி என்றால் ஞாபகம் வருவது நாட் வெஸ்ட் தொடர் தான். லார்ட்ஸில் 2002-ஆம் ஆண்டு நடந்த நாட் வெஸ்ட் தொடர் இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து. 43 பந்துகளில் 60 ரன்கள் விளாசி, அதிரடி தொடக்கத்தை கங்குலி ஏற்படுத்திக் கொடுத்தார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட யுவராஜ் – கைஃப் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றது. அதற்கு முன், இந்தியாவில் நடந்த தொடரில், இங்கிலாந்து வீரர் ஃபிளின்டாஃப் தனது பனியனை கழட்டி சுழற்றி இந்தியர்களை வெறுப்பேற்றி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்க, இந்த வெற்றியைவிட கங்குலிக்கு ஒரு சிறந்த வெற்றி வேண்டுமா? சும்மா
பனியனை கழட்டி சுத்து சுத்தினார் பாருங்க. கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்பதைத் தாண்டி, என்றும் இந்தியர்களின் நினைவுகளில் பசுமையாக இருக்கும் சம்பவம் அது.

 

இப்படி இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளானார். 2008ம் ஆண்டு ஆஸி., அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக இளம் கேப்டன் தோனி. அதன்படி, கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி, வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார், ஒரேயொரு சோகத்தை தவிர. அம்மாமனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட். ஆனால் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் கூட தனது கடைசி இன்னிங்சில் டக் தானே!

யார் சிறந்த கேப்டன் என்று கங்குலியையும், தோனியையும் எப்போதும் ஒப்பிட முடியாது. பல ஓட்டைகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி எனும் படகை சரி செய்து, ஓட்டைகளை அடைத்து, எந்தவித சேதமும் இன்றி படகை பயணம் செய்ய வைத்தவர் கங்குலி. சரி செய்யப்பட்ட அந்த படகை, கப்பலாக மாற்றி, புல்லட் வேகத்தில் பயணம் செய்ய வைத்தவர் தோனி.

இன்று (ஜுலை 8) 45-வது பிறந்தநாள் கொண்டாடும் ‘தாதா’ கங்குலிக்கு நமது வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close