ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடந்த U-19 உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள், சீனியர் கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் இந்திய U-19 அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பாராட்டாத ஆளே இல்லை.
சரி.. அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தோமேயானால், 2003-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், நமது சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம். இன்று நடந்த இறுதிப் போட்டிக்கும், 2003 இறுதிப் போட்டிக்கும் சில சுவாரஸ்ய ஒற்றுமைகள் உள்ளதை பார்க்க முடிகிறது.
அதாவது, அன்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசிய ஜாகீர் கான் முதல் பந்தை நோ பாலாக வீசினார். இன்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஓவரை வீசிய ஷிவம் மவி, முதல் பந்தை வைடாக வீசினார்.
அன்று, கங்குலி தலைமையிலான இந்திய அணி, லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்றது. மற்ற அனைத்து அணிகளையும் வென்றது. ஆனால், மறுபடியும் அதே ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த இந்தியா மீண்டும் தோற்று கோப்பையை நழுவவிட்டது. அந்த இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்த கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
இன்று, ஆஸ்திரேலிய அணி, லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோற்றது. மற்ற அனைத்து அணிகளையும் வென்றது. ஆனால், மறுபடியும் அதே இந்திய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோற்று கோப்பையை நழுவவிட்டது. இன்றும் இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்த கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
அன்று, தோற்றுப் போன இந்திய அணியில் ஒரு வீரராக இடம் பெற்றிருந்த ராகுல் டிராவிட் தான், இன்று மகுடம் சூடிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்.