விராட் கோலி... சும்மா கத்திட்டு நகர்ந்திட முடியாது! தில் வேணும்!

எக்ஸ்பெர்ட்டுகளாக மாறியிருந்த படகோட்டிகளின் உதவியுடன் ராஜாங்கம் நடத்தியவர் 'கேப்டன்' தோனி

ANBARASAN GNANAMANI

சிறு வயதில் சற்று பூசினாற் போல், நல்ல உடல் வடிவம் இல்லாத சிறுவன் ஒருவன் இன்று உலகின் ஃபிட்டஸ்ட் கிரிக்கெட் பிளேயர்களில் ஒருவர். அதிலும், இந்திய கிரிக்கெட்டில் டாப் ஃபிட்டஸ்ட் பிளேயர். அவர்… இந்திய கேப்டன் விராட் கோலி. இங்கு சம்பந்தமேயில்லாமல், கோலியின் உடல் ஃபிட் பற்றி ஏன் கூறுகிறேன் என்று யோசிக்க வேண்டாம். ஒரு நல்ல விளையாட்டு வீரனின் அடிப்படைத் தகுதியே உடலை சிறப்பாக கட்டமைத்து, அதை விட்டுவிடாமல் தொடருவது தான். அதை மிகச் சிறப்பாக செய்து வருபவர் விராட் கோலி. ‘கேப்டனே இவ்வளோ ஃபிட்டாக இருக்கும் போது, நாம எப்படி சும்மா இருப்பது’ என ஆட்டோமேட்டிக்காக சக வீரர்களும் தங்கள் உடல் நிலை மற்றும் ஃபார்ம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதுதான்… இதுதான் விராட் கோலி. வெறும் வாய் வார்த்தைக்காக தன்னை ‘அக்ரெஷன்’னான பிளேயராக காட்டிக் கொள்ளாமல், தன்னையே அனைத்திலும் முன்மாதிரியாக நிலை நிறுத்தி, தனது aggression-ஐ வெளிப்படுத்தி, மற்ற வீரர்களை கப்சிப் ஆக்குவதே விராட்டின் ஸ்டைல்.

ஒரு கேப்டனாக விராட் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது இந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பித்தது எனலாம். பொதுவாக, எல்லா விஷயங்களிலும் பெர்ஃபெக்ட்டாக இருக்கும் ஒருவர், உரசினால் பத்திக்கும் அளவுக்கு aggression-ஆக இருப்பார். அது போன்றதொரு ரகம் தான் விராட் கோலி. தன்னை எந்த இடத்திலும் யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாளும் தன்னை வடிமைத்துக் கொண்டே இருக்கிறார்.
இதன் ஒட்டுமொத்த வெளிப்பாடு தான், இன்று வெளியாகி இருக்கும் ஐசிசி ஒருநாள் தரவரிசையின் ரிசல்ட். ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி. அவர் முதலிடம் பிடித்ததற்காக இவ்வளவும் சொல்லவில்லை. அவர் பெற்றுள்ள ரேட்டிங் புள்ளிகள் எவ்வளவு தெரியுமா? 909.

இந்திய கிரிக்கெட்டில், ஒருநாள் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே அதிகபட்சமாக 887 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இதுவரை முதலிடத்தில் இருந்தார். இதை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார். இதுதான் இங்கு முக்கியம். இதுவரை வேறு எந்தவொரு இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேனும் 900 ரேட்டிங் புள்ளிகளை தொட்டது கூட கிடையாது. விராட் அதனைக் கடந்து 909 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்தமாக 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்காக சச்சின் பெஸ்டா? கோலி பெஸ்டா? என்று விவாதத்தை ஆரம்பித்து விட வேண்டும். இவர்களை மட்டுமல்ல, எந்த வீரர்களையுமே ஒப்புமைப்படுத்துவது என்பது மிகத் தவறானது. காலம், நேரம், சூழல், ரூல்ஸ் என அனைத்தும் டிசைன் டிசைனாக மாறிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், வீரர்களை ஒப்புமைப்படுத்துவது போன்றதொரு முட்டாள் தனமான விஷயமே இருக்க முடியாது. சரி! அது ஒருபக்கம் இருக்கட்டும், நாம விஷயத்திற்கு வருவோம்.

குறிப்பாக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1993ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசின் ‘மாஸ்டர்’ பிரைன் லாரா 908 ரேட்டிங் புள்ளிகள் எடுத்த பிறகு, வேறு எந்த பேட்ஸ்மேனும் அதற்கடுத்ததாக அந்தப் புள்ளியைத் தாண்டவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அதையும் விராட் கோலி தகர்த்துள்ளார்.

உலகளவில் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 ரேட்டிங் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதையும் விராட் கோலி தகர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. விராட் அடிக்கடி களத்தில் ஆக்ரோஷப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எப்போதும் முன் வைக்கப்படும் ஒன்று. ஆனால், அந்த ஆக்ரோஷத்தை வெற்றியாக மாற்ற ஒரு தில் வேண்டும். அந்த தில் தான் விராட் கோலியின் மைன்ஸ் கம் பிளஸ்.

அங்கங்கு ஓட்டைகள் விழுந்து, கவிழும் சூழலில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகை சரி செய்து, ஓட்டைகளை ஃபெவிக்கால் போட்டி ஓட்டி, மற்ற படகோட்டிகளை பட்டி பார்த்து டிங்கரிங் செய்து, படகை ஓட்டிச் சென்றவர் ‘கேப்டன்’ சவுரவ் கங்குலி. அந்த படகை கப்பலாக உருமாற்றம் செய்து, டிங்கரிங் செய்யப்பட்டு எக்ஸ்பெர்ட்டுகளாக மாறியிருந்த படகோட்டிகளின் உதவியுடன் ராஜாங்கம் நடத்தியவர் ‘கேப்டன்’ மகேந்திர சிங் தோனி. அதே கப்பலை 2.0 வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய படகோட்டிகளை அப்பாயின்ட் செய்து, வெளிநாட்டு கடல் பகுதியிலும் ரவுண்டு கட்ட ஆரம்பித்து இருப்பவர் ‘கேப்டன்’ விராட் கோலி.

மேலும் படிக்க: சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோலி, பும்ரா, ரஷித் கான்!

×Close
×Close