Advertisment

'குறி வைத்து தூக்கி இருக்காங்க; இது டீம் இல்ல ஃபேமிலி': சி.எஸ்.கே பற்றி மனம் திறந்த வர்ணனையாளர் முத்து

"அஸ்வினுக்கு இது ஹோம் கம்மிங் தான். அவரது கேரியர் இங்கிருந்து தான் தொடங்கியது. தற்போது அவரது கேரியர் முடியும் தருணத்தில் மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு வந்திருக்கிறார்" என்று வர்ணனையாளர் முத்து கூறினார்.

author-image
Martin Jeyaraj
New Update
 sports commentator pradeep muthu about Chennai Super Kings CSK squad IPL 2025 mega auction Tamil News

சி.எஸ்.கே அணி குறித்து மனம் திறந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து.

ச. மார்ட்டின் ஜெயராஜ். 

Advertisment

ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் எனும் கோதாவில் குதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி  மெச்சும் படியாகவே செயல்பட்டது. முதல் நாள் தொடக்கத்தில் சிறிது சுணக்கம் இருந்தாலும், நாளின் பிற்பகுதியில் தங்களது ஆடும் லெவன் அணியை கட்டமைக்க தரமான வீரர்களை வசப்படுத்தியது. அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என்கிற ஃபார்முலாவையும், முன்னணி மற்றும் பேக்அப் வீரர்கள் என்கிற கணக்கையும் கச்சிதமாகவே கையாண்டனர். 

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியிருக்கும் சென்னை அணி, இம்முறை 6-வது பட்டத்துக்கு குறி வைத்து, ஏலத்தில் இருந்து அதற்கு ஏற்ப அணியை கட்டமைத்துள்ளது. பேப்பரில் வலிமையான அணியாக தென்படும் சி.எஸ்.கே களத்திலும் வலிமையாக இருப்பார்களா? அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என்கிற கலவையான வீரர்களை வைத்து அவர்கள் எப்படி தங்களது ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வார்கள்? ரசிகர்கள் எதிர்பார்க்கும் சி.எஸ்.கே ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும்? என்பது போன்ற நமது அடுக்கான கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதில் தந்தார் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து.

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு பிறகு அவரை  நாம் போனில் தொடர்பு பேசினோம். சென்னை அணி குறித்து அவர் நம்மிடம் பேசுகையில், " சி.எஸ்.கே அணி மிகவும் நன்றாக இருக்கிறது. பழைய வீரர்களை திரும்ப அணிக்குள் வர வேண்டும் என்கிற ஃபார்முலாவை இம்முறையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் அவர்கள் எப்போதுமே கவனம் செலுத்தி வருவதால்  தான், கடந்த சீசனில் அணியில் இருந்த டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரை குறித்து வைத்து எடுத்து இருக்கிறார்கள். 

Advertisment
Advertisement

இதேபோல், சில ஆண்டுக்கு முன்  சி.எஸ்.கே அணியில்  ஆடிய சாம் கரனை குறைந்த தொகைக்கு வாங்கினார்கள். அதனால், அவர்கள்  தங்களது பாரம்பரித்தை தொடர்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு அணி என்பது ஒரு குடும்பம். 

சி.எஸ்.கே அணியால் வளர்த்தெடுப்பட்ட துஷார் தேஷ்பாண்டேவை வாங்க அவர்கள் ஏலத்தில் முடிந்த அளவுக்கு சென்றார்கள். ஆனால், தொகை அதிகமாக இருந்ததால், அவர்கள் பின்வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இல்லையென்றால், அவரையும் வாங்கி இருப்பார்கள். தவிர, இடது வேகப்பந்துவீச்சு இல்லாத குறையை இளம் வீரரான குர்ஜப்னீத் சிங் மற்றும் கலீல் அகமது-வை வாங்கியதன் மூலம் போக்கி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இது  ஒரு சிறப்பான அணி என்றே கூறுவேன்." என்றார். 

மூத்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினை சி.எஸ்.கே அணி வசப்படுத்திய பற்றி முத்து பேசுகையில், "இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். அவரை எப்படியும் வாங்கி விடுவார்கள் என்று தான் இருந்தோம். அவரை வாங்குவதற்காக குறிப்பிட்ட தூரம் வரை செல்லலாம் என்று நினைத்தார்கள். அதனை அவர்கள் அடைந்தார்கள். 

அஸ்வினுக்கு இது ஹோம் கம்மிங் தான். அவரது கேரியர் இங்கிருந்து தான் தொடங்கியது. தற்போது அவரது கேரியர் முடியும் தருணத்தில் மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு வந்திருக்கிறார். சி.எஸ்.கே அணி கோப்பை  வெல்லும் போது, எப்போதுமே அவர்களிடம் ஒரு ஆஃப் ஸ்பின்னர் இருப்பார். முன்பு அஸ்வின், முரளிதரன், ஹர்பஜன் போன்றோர் இருந்தார்கள். இப்போது மீண்டும் அஸ்வின் அணிக்குள் வந்துள்ளார்." என்று  அவர் கூறினார்.

இந்த முறை ஏலத்தில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் வாங்கப்பட்டது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26.75 கோடி, பஞ்சாப்), வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி, கொல்கத்தா) ஆகியோர் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டனர். 

இதுபற்றி முத்து கூறுகையில், "எனக்கு என்ன  ஆச்சரியமாக இருந்தது என்றால், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தான் அதிக தொகை கையில் இருந்தது. ஆனால், அவர்கள் ரிஷப் பண்ட்டை வாங்கவில்லை. ஒருவேளை, டெல்லி பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், ஏற்கனவே ரிஷப் பண்ட் உடன் வேலை செய்திருந்ததால், அவர் கேப்டனாக மீண்டும் வேண்டாம் என்று கூறி இருக்கலாம். இதன் காரணமாகத் தான் அவர்கள் ஸ்ரேயாஸ் அய்யரை வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள். தவிர, வீரர்களின் வரிசையில் ஸ்ரேயாசுக்கு பின் தான் பண்ட் ஏலத்திற்கு வந்தார்." என்றார். 

தொடர்ந்து, ஏலம் போகாத சில  முன்னணி வீரர்கள் குறித்து  அவர் பேசும்போது,"விற்கப்படாமல் போன வீரர்களில் ஷர்துல் தாக்கூர் எந்த அணியாலும் வாங்கப்படமால் போனது எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. கடந்த முறை நடந்த மெகா ஏலத்தில் அவரை ரூ. 10.75 கோடிக்கு வாங்கி இருந்தார்கள். இதிலிருந்து, உங்களை அணிகள் உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதும், உங்களால் பழைய பெயரை வைத்துக் கொண்டு ஓட்டி விடலாம் என்கிற எண்ணம் இருக்ககூடாது, உங்களது திறனை அவர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. இது ஏலம் போகாத மற்ற வீரர்களும் பொருந்தும்.  

இந்த ஏலத்தில் இருந்து நான் கவனித்த ஒன்று இருக்கிறது. இதனை அவர்கள்  பரிசீலனை செய்யலாம். அதாவது எனது மனதில் தோன்றுவது என்னவென்றால், விற்கப்படாமல் போகும் வீரர்கள் கடைசி சுற்று ஏலத்தின் போது அவர்களின் அடிப்படை விலையை குறைத்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்பேன். ஒரு வீரர் ரூ. 2 கோடியை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்து இருக்கிறார். ஆனால், கடைசி சுற்றில் ஒரு  அணியிடம் அந்த 2 கோடி இருப்பதில்லை. அந்த நேரத்தில் வீரர்கள் தங்களது அடிப்படை விலையை  குறைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம். 

உதாரணமாக, நான் ஒரு துணிக்கடை வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளோம். நான் ஒரு சட்டையை  ரூ. 500 என விலை நிர்ணயம் செய்து விற்கிறேன். அது விலை போகவில்லை எனில், அதனை  ஆடி ஆஃபர் எனக் குறிப்பிட்டு ரூ.200-க்கு விற்கலாம். அப்படித்தான், வீரர்கள் கடைசி சுற்று ஏலத்தின் போது தங்களது அடிப்படை விலை ரூ.2 கோடி என்பதில்  இருந்து ரூ. 1 கோடி அல்லது ரூ. 50 லட்சம் எனக் குறைத்துக் கொள்ள வாய்ப்பு கொடுக்கலாம்." என்று வர்ணனையாளர் முத்து கூறுகிறார். 

வர்ணனையாளர் முத்துவின் சி.எஸ்.கே ஆடும் லெவன்:- 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, அஷ்வின், நூர் அகமது/  சாம் கரன்,  மதீஷா பத்திரனா,கலீல் அகமது.

சி.எஸ்.கே வீரர்கள் பட்டியல்: 

ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, டெவோன் கான்வே (ரூ. 6.25 கோடி), ராகுல் திரிபாதி (ரூ. 3.40 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ. 4 கோடி), ஆர்.அஷ்வின் (ரூ. 9.75 கோடி), கலீல் அகமது (ரூ. 4.80 கோடி), நூர் அகமது (ரூ. 10 கோடி), விஜய் சங்கர் (ரூ. 1.20 கோடி), சாம் கரன் (ரூ. 2.40 கோடி), ஷேக் ரஷீத் (ரூ. 30 லட்சம்), அன்ஷுல் கம்போஜ் (ரூ. 3.40 கோடி), முகேஷ் சவுத்ரி (ரூ. 30 லட்சம்) ), தீபக் ஹூடா (ரூ. 1.70 கோடி), குர்ஜப்னீத் சிங் (ரூ. 2.20 கோடி), நாதன் எல்லிஸ் (ரூ. 2 கோடி), ஜேமி ஓவர்டன் (ரூ. 1.50 கோடி), கமலேஷ் நாகர்கோட்டி (ரூ. 30 லட்சம்), ராமகிருஷ்ண கோஷ் (ரூ. 30 லட்சம்), ஷ்ரேயாஸ் கோபால் (ரூ. 30 லட்சம்), வான்ஷ் பேடி (ரூ. 55 லட்சம்), ஆண்ட்ரே சித்தார்த் (ரூ. 30 லட்சம்).

ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாட்களாக, மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஏலத்தில், 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்ற சூழலில், மொத்தமாக 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pradeep Muthu Csk Ipl Auction Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment