Advertisment

"மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44-வது பர்த்டே...

"மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளையொட்டி விளையாட்டு பிரபலங்கள் பலர் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
"மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44-வது பர்த்டே...

மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சச்சின் டெண்டுல்கர். தனது 16-வது இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த அவர், 1989-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களம் இறங்கினார். அப்போது முதல் 24-வருடங்கள் கிரிக்கெட்டில் பயணம் செய்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற மாபெரும் பெருமைக்கு சொந்தக்காரர். ஆனால், தான் முதலில் விளையாடிய 79- ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது ஆச்சர்யம் தான்.

Advertisment

தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ’மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின், தனது 44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 24-ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தனது பேட்டை பயன்படுத்தி எதிரணிக்கு பதில் சொல்லும் சச்சினுக்கு உலக அரங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து  உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் 34,357 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணியில் இருந்து 6 உலகக் கோப்பைகளை சந்தித்துள்ள சச்சினுக்கு, கடந்த 2011-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடிய சச்சினுக்கு அந்த ஆண்டு சிறந்ததானது தான். தனி நபராக பல சாதனைகளை படைத்த போதிலும், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே சச்சினின் கனவாக இருந்து வந்தது. 2011-ம் ஆண்டு இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியதனால் அந்த மாபெரும் கனவு சாத்தியமானது.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15,921 ரன்களை குவித்துள்ளார். இதில் 51 சதங்களும், 68 அரை சதங்களும் அடங்கும். இதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர்18,426 ரன்களை குவித்துள்ளார். இதில் 49 சதங்களும் 96 அரை சதங்களும் அடக்கம்.

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவருக்கு 1994-ம் ஆண்டு 'அர்ஜூனா' விருது. விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான "ராஜிவ் காந்தி கேல் ரத்னா" விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பத்ம ஸ்ரீ, பத்ம  விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளுக்கும் சொந்தக்காரரானார். இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னாவும் கடந்த 2014-ம் ஆண்டு சச்சினுக்கு வழங்கப்பட்டது.

இத்தகைய பல்வேறு சாதனைகள் படைத்த சச்சினுக்கு இன்று பிறந்தாள். இதனையொட்டி பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ளே தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், முன்னுதாரனமாக திகழும் விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அவருக்கு அற்புதமானதாய் அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளதாவது: ஹேப்பி பர்த்டே சச்சின். 44-வது இளம் வயதை அடையும் உங்களுக்கு இந்த நாள் மட்டுமல்லாது இந்த வருடம் முழுவதும் சிறப்பானதாய் அமைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான கில்கிரிஸ்ட், சச்சினுக்கும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் ப்ளெம்மிங்கிற்கும் சேர்ந்து ஒரே ட்வீட்டில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஆர்.பி சிங் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஹேப்பி பர்த்டே மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின். எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் தொடர்ந்து முன்னுதாரனமாக திகழ்கின்றீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஹேப்பி பர்த்டே சச்சின். ஏப்., 24-வது நாளை இந்திய கிரிக்கெட் தினமாக கொண்டாட வேண்டும். முன்னதாக இந்திய அணியில் தங்களுடன் இணைந்து விளையாடியாது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குத்துச்சண்டை வீரரான விஜேந்தர்சிங் தெரிவித்துள்ளதாவது: கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் மற்றும் பாரத ரத்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களை போல பல்வேறு தரப்பினரும் சச்சின் டெண்டுல்கருக்கு சமூக வலை தளங்களின் மூலமாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sachin Tendulkar Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment