ஏறக்குறைய 180 ஓவர்களை வீணடித்த மழை, ஒருவழியாக ஒரு சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியை நம் முன்னே முடித்து வைத்துள்ளது. இந்தியா, இலங்கை இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 231 ரன்கள் என்கிற இலக்கை துரத்திய இலங்கை அணியால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் ரங்கனா ஹெராத் கூட அரைசதம் அடித்தாலும், இரண்டாம் இன்னிங்ஸில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களால் கூட இந்திய பவுலிங்கை எதிர்கொள்ள முடியவில்லை.
புவனேஷ் குமாரின் ஸ்விங்கையும், முகமது ஷமியின் பல வெரைட்டி பந்துகளையும் எதிர்கொள்ள அவர்கள் மிகவும் திணறினர். குறிப்பாக, இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமல் ஷமியின் ஸ்விங் பந்துவீச்சில் போல்டான விதத்தை பார்த்தால், நான் சொல்வது புரியும். அவுட்டானவுடன், சந்திமல் ஒருகணம் அதிர்ச்சி கலந்த மிரட்சியுடன் ஷமியை பார்த்தது 'செம' மொமன்ட். "பந்து நேரா வந்துச்சு... நாம பேட்டை நீட்டினோம்... ஆனா, ஸ்டெம்ப் எப்படி பறந்தது?' என்பது போல் இருந்தது அவரது ஃபீலிங். (இருப்பினும் மீசையில் மண் ஒட்டாதது போலவே இருக்கிறது அவரது போஸ்ட் மேட்ச் ஸ்பீச்)
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்க, 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருந்தது இலங்கை அணி. இன்னும் மூன்று விக்கெட்டுகளைக் வீழ்த்திவிட்டால், வெற்றி என்ற முனைப்போடு கோலி படை அனல் பறக்க பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில், இலங்கை பேட்ஸ்மேன்கள் வேண்டுமென்றே நேரத்தை கடத்தி வீணடித்தனர். 19-வது ஓவரின் முதல் பந்தை வீச ஷமி ஓடிவந்தார். ஆனால், அந்த பந்தை எதிர்கொள்ளாமல் நிரோஷன் டிக்வெல்லா தடுத்துவிட்டார். இதையடுத்து, மீண்டும் பந்துவீச ஷமி ஓடிவந்த போது, மறுபடியும் டிக்வெல்லா அவரை பாதியிலேயே நிறுத்தினார்.
அதே ஓவரில், மீண்டும் ஷமி பந்துவீச ஓடி வந்த போது, டிக்வெல்லா மீண்டும் நிறுத்தினார். இம்முறை, ரசிகர்களே டென்ஷனாகி பலத்த கோஷம் எழுப்பி இச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வீரர்கள் தான் இதுபோன்று சில்லித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றால், அணி நிர்வாகம் அதற்கும் ஒருபடி மேலேயே சென்றுவிட்டது. ஆட்டமே, இன்னும் சில நிமிடங்களில் முடியவிருக்கிறது. அப்போது, தண்ணீரையும், டவலையும் எடுத்துக் கொண்டு பெவிலியனில் இருந்து இரண்டு வீரர்கள் கிரவுண்டிற்குள் ஓடி வந்துக் கொண்டிருக்கிறார்கள்.(பேட்ஸ்மேன்களை ரெஃப்ரெஷ் செய்கிறார்களாம்) டென்ஷனான விராட், அம்பயரிடம் முறையிட, ரசிகர்களும் கூச்சலிட, அந்த இரண்டு பேரும் பாதியிலேயே திரும்பிச் சென்றுவிட்டனர். (இதற்கு சந்திமல் அப்செட் வேற ஆகிறார்!)
தோல்வியைத் தவிர்க்க, நேரத்தைக் கடத்துவது என்பது பொதுவாக விளையாட்டுகளில் கடைபிடிக்கப்படும் யுக்தி தான். அது பெரிய தவறில்லை. ஆனால், இலங்கை அணி நிர்வாகம் எப்போதும் சீப்பான செயல்களில் ஈடுபடுவது என்பது வழக்கமான ஒன்றே.
அந்த அணியின் ஜாம்பவான் வீரரான சங்கக்காரா கூட இதில் விதிவிலக்கில்லை. விக்கெட் கீப்பரான அவரது கைக்கு பந்து சென்றாலே போதும், அவுட் அப்பீல் செய்து விடுவார். டிவியில் பார்க்கும் நமக்கே இது அவுட் இல்லை என்பது தெரியும். ஆனால், அவர் கூச்சமே படாமல் அம்பயரிடம் அவுட் கேட்பார். (தோனி-லாம் நமக்கு வரம்ணே... வரம்)
அவரே அப்படியென்றால், புதுமுக வீரர்களை என்ன சொல்ல. அவர்களின் கனவு நாயகர்களைத் தானே அவர்களும் ஃபாலோ செய்வர்.
அதுசரி! ஷேவாக் 99 ரன்களில் இருக்கும் போது, இன்னும் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்றிருக்கும் நிலையில், அவருக்கு நோ-பால் போட்டு சதம் அடிக்க விடாமல் சில்லித்தனமாக தோற்றவர்கள் தானே இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.