இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு, மீண்டும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்கவிருக்கும் சென்னை அணி மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்தில் இருந்தது. சிஎஸ்கே ரசிகர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. விளையாடாமல் இருந்த போதே, தூணாக இருந்து சென்னை அணியைத் தாங்கிப் பிடித்தவர்கள், இப்போது மீண்டும் களம் இறங்குவதால், பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த பிறகு, சென்னை அணி தோனி, ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்தது. இதனால், ஏலத்தின் மீது அனைவரது பார்வையும் இருந்தது.
முதல் நாளான நேற்று ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர், கர்ண் ஷர்மா, டு பிளசிஸ், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு ஆகியோரை எடுத்தது. அவ்வளவுதான். சமூக தளங்களில், 'இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா அலல்து சென்னை சீனியர் கிங்ஸ் அணியா?' என்றும், 'இது முதியோர்கள் வசிக்கும் கூடம்' என்றும் பலரும் கிண்டல் செய்தனர். ஜடேஜாவைத் தவிர அணியில் இருக்கும் அனைவரும் 30 வயதை கடந்தவர்கள் என விமர்சனங்கள் எழத் தொடங்கின.
இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் தான் யார் என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்து காட்டியிருக்கிறார்.
நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 21 வயதான லுங்கி ங்கிடியை, வெறும் 50 லட்சத்துக்கு அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆசிப் கே எம், 23 வயதான ஹரியானாவைச் சேர்ந்த சைதன்யா பிஷ்னாய், ராஞ்சியைச் சேர்ந்த 23 வயதான மொனு குமார் சிங், டெல்லியைச் சேர்ந்த 25 வயதான துருவ் ஷோரே, கொல்கத்தாவைச் சேர்ந்த 20 வயதான கணிஷ்க் சேத், தமிழகத்தைச் சேர்ந்த 22 வயதே ஆன நாராயண் ஜகதீசன் என இளம் படையையே இறக்கியுள்ளார் பிளமிங். இவர்கள் தவிர மிட்சல் சான்ட்னர், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ் போன்ற திறமை வாய்ந்த நட்சத்திரங்களையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இப்போது சென்னை அணி மிகத் தெளிவான கலவையில் உள்ளது. முதல் நாள் ஏலத்தில் தோனியின் ஆட்டத்தைப் போன்று பொறுமையாக, நிதானமாக வீரர்களை தேர்வு செய்த சிஎஸ்கே அணி, இரண்டாம் நாளான இன்று, இறுதிக் கட்டத்தில் தோனியின் அதிரடி ஆட்டத்தைப் போல பல புதிய இளம் வீரர்களை லான்ச் செய்து அசத்தியுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வினை இழந்திருப்பது மட்டுமே சென்னை ரசிகர்களுக்கு சோகமான செய்தி. அதைத் தவிர, ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்கள் உள்ளன.
இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு, மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியை களம் காணவிருக்கிறது ஐபிஎல். குறிப்பாக, தோனியின் கையில் மீண்டும் கேப்டன்ஷிப்!.
நாங்க வந்துட்டோம்-னு சொல்லு!.... திரும்பி வந்துட்டோம்-னு சொல்லு!