தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மர்ம பொருள் கொண்டு ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேன்க்ராஃப்ட் பந்தை சேதப்படுத்த, எங்களது வாழிகாட்டுதலின் பேரில் தான் அவர் பந்தை சேதப்படுத்தினர் என கேப்டன் ஸ்மித்தும், துணை கேப்டன் வார்னரும் உண்மையை ஒப்புக் கொள்ள, வெலவெலத்துப் போனது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இதைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டு உள்ளது. மேலும், போட்டி ஊதியத்தில் 100%, பேன்க்ராஃப்ட்டுக்கு 75% பிடித்தம் செய்யவும் ஐசிசி உத்தரவிட்டது.
ஆஸ்திரேலிய தலைமை கோச் டேரன் லீமனுக்கு எங்களது திட்டம் தெரியாது என்று ஸ்மித் சொன்னாலும், முன்னாள் கேப்டன் கிளார்க்கோ, 'அது எப்படி? கோச்சுக்கு தெரியாமல் இதை கேப்டன் செய்ய முடியும்?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஒரு குழுவை தென்னாப்பிரிக்க அனுப்பியுள்ளது. அவர்களும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பயிற்சியாளர் லீமன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.