இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளிடையேயான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விலகியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. முன்னதாக, நடந்து முடிந்த ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இதனால், டி20 போட்டித் தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற உறுதியுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தோள்பட்டை காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். நாக்பூரில் நடந்த 5-வது ஒருநாள் போட்டியில் போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டது தான் அவரது விலகலுக்கு காரணம்.
ஏற்கெனவே, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஸ்டீவ் ஸ்மித்தின் விலகல் என்பது பின்னடைவாக கருதப்படுகிறது. ஸ்டீவ் ஸ்தித்திற்கு பதிலாக மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல, ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டாக டேவிட் வார்னர் செயல்படவுள்ளார். இந்த நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடையேயான ஆஷஸ் தொடர்அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டி 20 போட்டி ராஞ்சியில் இன்று(சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. 2-வது போட்டி வரும் 10-ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது போட்டி ஹைதராபாத்தில் வரும் 13-ம் தேதியும் நடைபெறவுள்ளது.ஒருநாள் போட்டி தொடரை இழந்துள்ள நிலையில், டி20 தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கும் என்பதால், இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.