நம்மூரில் இருந்து போகும் ஒரே 'அம்பயர்' இவருதான்!

ஜூன் 1 அன்று தொடங்கும் முதல் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கே இவர் தான் அம்பயர்.....

வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான அம்பயர் மற்றும் மேட்ச் ரெஃப்ரீக்கள் குறித்த பட்டியலை ஐசிசி இன்று (வியாழன்) வெளியிட்டுள்ளது. இத்தொடரில், சுந்தரம் ரவி என்பவர் மட்டுமே இந்தியா சார்பாக அம்பயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 1 அன்று தொடங்கும் முதல் போட்டியில், போட்டியை நடத்தும் இங்கிலாந்தும் வங்கதேச அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கு சுந்தரம், ராட் டக்கருடன் இணைந்து கள அம்பயராக செயல்படுகிறார்.

ஒட்டுமொத்தமாக, இந்தத் தொடரின் லீக் போட்டிகள் வரை கிறிஸ் போர்ட், டேவிட் பூன், ஆண்டி பைக்ராஃப்ட் ஆகியோர் மேட்ச் ரெஃப்ரீக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அலீம் தார், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மாஸ், கிறிஸ் காஃப்னே, இயன் கோல்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்போர்க், நீகல் லாங், ப்ரூஸ் ஆக்சன்ஃபோர்டு, சுந்தரம் ரவி, பால் ரைஃபல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் அம்பயர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், அலீம் தார் ஐந்தாவது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பணிபுரிகிறார். இயன் கோல்ட் மூன்றாவது முறையாக பணியாற்ற உள்ளார். தர்மசேனா, எராஸ்மாஸ், லாங், ஆக்சன்ஃபோர்டு, ராட் டக்கர் ஆகியோருக்கு இது இரண்டாவது சாம்பியன்ஸ் டிராஃபி அனுபவமாகும். சுந்தரம் ரவி மற்றும் பால் ரைஃபல் ஆகியோருக்கு இதுதான் முதல் சாம்பியன்ஸ் டிராஃபி என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அம்பயர் மற்றும் ரெஃப்ரீக்கள் குறித்த விவரம், அணிகள் தேர்வான பின் அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

×Close
×Close