விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்! - இந்திய கால்பந்து அணிக்காக மாஸ் காட்டிய ரசிகர்கள்!

ஒரு சீட் கூட மிச்சமில்லாமல் ரசிகர்கள் டிக்கெட் புக்கிங்

நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும். ஆனால், இப்போட்டியை இரண்டாயிரம் ரசிகர்களுக்கும் குறைவானவர்களே பார்த்தனர். இதனால் வேதனையடைந்த சுனில் சேத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், “நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை” என்று உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘இந்திய ரசிகர்கள் அனைத்து விதமான விளையாட்டுகளையும் ஊக்குவிக்க வேண்டும்’ என கோலி கூற, ‘இந்திய மக்களே! இந்திய கால்பந்து அணி எங்கு விளையாடினாலும் மைதானத்தை நிரப்புவோம்’ என சச்சின் அழைத்தார்.

இதனால், நாடு முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் இந்திய கால்பந்து அணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று இரவு எட்டு மணிக்கு இந்திய அணி கென்யாவை எதிர்கொள்ளவிருக்கிறது. சேத்ரியின் உருக்கமான வேண்டுகோள் மற்றும் சச்சின், கோலியின் அழைப்பையடுத்து, இப்போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியதால், இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டது. ஒரு சீட் கூட மிச்சமில்லாமல் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து இந்திய கால்பந்து அணிக்கு தங்கள் மரியாதையை செலுத்தியுள்ளனர்.

இது மென்மேலும் தொடர்ந்து, கிரிக்கெட்டை போல அனைத்து விளையாட்டும் அதை விளையாடும் வீரர்களும் மதிப்பு பெற வேண்டும் என்பதே நமது விருப்பமும் ஆகும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close