10-வது ஐபிஎல் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் முன்னேறின.
இந்நிலையில் மும்பையில் இன்று நடைபெறும் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், மும்பை அணியை புனே அணி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். தோற்கும் அணி இரண்டாவது தகுதிப் போட்டிக்கு சென்றுவிடும்.
கடந்த 6-ந் தேதி நடைபெற்ற புனே அணிக்கெதிரான போட்டியின் போது நெஹ்ராவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பணிற்சியாளர் டாம் மூடி இது குறித்து கூறியதாவது: ஆஷிஸ் நெஹ்ராவுக்கு ஏற்பட்ட காயமும் முழுமையாக குணமடையாத நிலையில், அவர் முழு உடல் தகுதி பெறவில்லை. எனவே நடப்புத் தொடரில், இனி வரும் போட்டிகளில் ஆஷிஸ் நெஹ்ரா பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்தார்.
நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. முக்கியமான நாக் அவுட் சுற்று என்பதால், வேகப்பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசி வரும் நெஹ்ராவின் இழப்பு ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.