வங்காளதேசம் தலைநகர் டாக்காவில், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி ஜப்பான், வங்காளதேசம் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுது.
இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது. இந்திய அணி சார்பில் சாங்லின்சனா சிங் 17-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 44-வது நிமிடத்திலும், ரமன்தீப் சிங் 45-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
பாகிஸ்தான் தரப்பில் அலி ஷான் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, இந்தியா பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.
இதையடுத்து, இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுபோல், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும், இந்திய ஹாக்கி அணியை வாழ்த்தி ட்வீட் செய்து வருகின்றனர்.