லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தாதது ஏன்? பி.சி.சி.ஐ-க்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவானது, லோதா குழுவின் பரிந்துரைகள், நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தவில்லை

2013-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளின்போது நடந்த சூதாட்ட சர்ச்சைகளால், பிசிசிஐ சீர்கெட்டு உள்ளதாகப் பல தரப்புகளிலிருந்தும் புகார்கள் எழுந்தன. இதையொட்டி, பிசிசிஐ குழுவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள லோதா தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. பிசிசிஐ மூலம் லோதா குழு பிறப்பிக்கும் பரிந்துரைகளை மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின், லோதா குழுவின் பரிந்துரைகள் தாமதப்படுத்தப்படாமல் விரைவாக நிறைவேற்றப்படுவதற்காக, ஏழு பேர் கொண்ட புதிய குழுவை பிசிசிஐ நியமித்தது. ஐபிஎல் தலைவர் ராஜேஷ் சுக்லா தலைமையிலான இந்த புதிய குழுவில், பிசிசிஐ செயலாளர் அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவானது, நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை என நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதி அமர்விடம் தெரிவித்தது.

மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் ஆஜராகி, பி.சி.சி.ஐ.யின் அதிகாரிகளான சி.சே. கன்னா, அமிதாப் சவுத்ரி மற்றும் அனிருத் சவுத்ரி ஆகிய 3 பேரும் நீதிபதி லோதா குழு பரிந்துரைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு பொறுப்பு வகிப்பவர்கள். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை என நீதிபதி அமர்வில் கூறினார்.

நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை உள்ளடக்கிய இந்த அமர்வு, பி.சி.சி.ஐ. பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரியை வருகிற செப்டம்பர் 19ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி லோதா குழு அறிக்கை மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பி.சி.சி.ஐ. அமல்படுத்திடாததற்கு தனது வருத்தத்தினையும் தெரிவித்துள்ளது.

×Close
×Close