Suresh Raina: "பின்னடைவுகள் உங்களுக்கு பாடங்களை போதித்து, உங்களின் மனதை வலுவாக்குகிறது. நாம் நினைப்பது எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தால், நினைப்பதை அடைய வேண்டிய வழிகளை நோக்கி உழைக்க வேண்டும்"
என்றாவது ஒருநாள் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாவோம் என்ற நம்பிக்கையில் சுழலும் சுரேஷ் ரெய்னா அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள் இவை.
2018ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில், விமானத்தில் இவருக்கென்று ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, இன்று வரை இந்திய அணியில் இவருக்கான இருக்கை காலியாகவே உள்ளது.
கேப்டன் விராட் கோலியைப் போன்று கவர் டிரைவ் செய்வதில் தனித்திறமை, தனி அடையாளம், பந்தை ஃபிலிக் செய்வதில் தனித்திறமை, தனி அடையாளம் என்று பெரிதாக ரெய்னாவுக்கென்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் எந்த 'signature' -ரும் கிடையாது. ஏன், ரோஹித்தைப் போன்று கேஷுவலாக வீரியமிக்க ஃபுல் ஷாட் சிக்ஸ் அடிப்பதிலும் வல்லவர் கிடையாது.
ஆனால், மேலே நாம் சொன்ன கவர் டிரைவ், புல் ஷாட் போன்ற எல்லா வகை வெரைட்டி ஷாட்களும், ரெய்னா பேட்டில் இருந்து புறப்பட்டு தெறித்து பறந்திருக்கின்றன. சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பதில் சொல்லும் ரெய்னாவின் அக்ரெஸ்ஸிவ் குறித்து.
ஆனால், இரண்டு ஆண்டுகளாக ரெய்னா இந்திய அணியில் இல்லை. இனியும் இல்லை என்பது போன்ற செய்திகளே ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்கின்றன.
இந்திய அணி படைத்த தலைசிறந்த பீல்டர்களில் ஒருவரான ரெய்னாவுக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது?
ஒரே பதில், அவரது ஃபிட்னஸ்.
கிரிக்கெட் என்றல்ல, உலகின் எப்பேற்ப்பட்ட விளையாட்டு வீரனுக்கும் ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் என்பது அவன் உண்ணும் உணவை விட முக்கியமானவை ஆகும். ரெய்னா அந்த இடத்தில் தான் சற்றே சறுக்கினார்.
2017, 2018 காலக்கட்டத்தில் அவரது உடல் எடை கொஞ்சம் கூட, பார்ப்பவர்களுக்கு 'என்னப்பா இது' என்று சொல்லும் லெவலுக்கு சென்றது. யுவராஜ் சிங், அணியில் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள போராடிய காலம் இந்த 2017-18. ரெய்னாவுக்கு அப்போது பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால், அவரது உடல் எடை தோற்றம் அதற்கு பின்னடைவாக அமைய, எதார்த்தத்தைப் புரிந்து கொண்டார் ரெய்னா.
மெடிடேஷன், 7 மணி நேர தூக்கம், கடுமையான உணவுக் கட்டுப்பாடு, விடாப்பிடி உடற்பயிற்சி போன்றவற்றால் 2019 ஆரம்பக் கட்டத்தில் தனது உடல் எடையை குறைத்துக் காட்டினார். ஆனால், அதற்குள் ப்ரித்வி ஷா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்றோர் அணிக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். குறைந்தபட்சம் தங்கள் தான் அணியின் ஃபியூச்சர் என்பதை வெளிக்காட்டிவிட்டனர்.
குறிப்பாக, ஷ்ரேயாஸ் ஐயர் ரெய்னாவின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்.
விராட் கோலி கட்டமைக்க நினைத்த இந்திய அணி, இப்போது அல்மோஸ்ட் வடிவம் பெற்றுவிட்ட நிலையில், தோனியின் 'பங்கு' ரெய்னாவுக்கு மீண்டும் அணியில் கிடைக்குமா என்பது பெரும் சந்தேகமே. இத்தனைக்கும், உடல் இளைத்து, ஃபிட்னஸ் காட்டினாலும், கிரவுண்டின் நான்கு மூலையிலும் காட்டுக்காட்டும் வீரர்கள் அணிக்குள் தஞ்சம் புகுந்துவிட்டதால், இனி கோலியின் பிளேயர்ஸ் ஸ்லாட்டில் ரெய்னாவின் பெயர் இடம் பெறுமா என்பது சந்தேகம் தான்.
இப்போது எதற்கு திடீரென ரெய்னா பற்றி என்கிறீர்களா?
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், ரெய்னாவுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என நான் கருதவில்லை என்றும் மிடில் ஆர்டரில் இளம் வீரர்களுக்கே கோலி வாய்ப்பளிப்பார் என்பதால், ரெய்னாவுக்கு வாய்ப்புகள் கடினம் தான் என்று கூற, சமூக தளங்களில் ரசிகர்கள் ரெய்னாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதற்காகவே, வாசகர்களாகிய உங்களுக்காக ரெய்னா பற்றிய இந்த குட்டி பிளாஷ்ஃபேக்.
சரி.... அப்போ உண்மையிலேயே இனி ரெய்னா ப்ளூ ஜெர்சி அணிவதை பார்க்கவே முடியாதா என்று கேட்டீர்கள் எனில், அதற்கான பதில் கட்டுரையின் முதல் பத்தியில் உள்ளது.
வீ லவ் யூ ரெய்னா!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.