scorecardresearch

சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: யோ – யோ டெஸ்டில் ரெய்னா பாஸ்: மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு!

வீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா இன்று தேர்ச்சி பெற்றுள்ளார்

யோ-யோ டெஸ்ட்டில் சுரேஷ் ரெய்னா தேர்சசி
யோ-யோ டெஸ்ட்டில் சுரேஷ் ரெய்னா தேர்சசி

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா இன்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன?

இந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை, தொடர்ச்சியாக இரு இடைவெளிக்குள் ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை, அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.

ஆனால், முன்னதாக நடந்த இந்த தேர்வில் யுவராஜ் 16 மதிப்பெண்ணும் ரெய்னா 16.5 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தனர். இதன் காரணமாகவே அவர்களால் தற்போது அணியில் இடம் பெற முடிவதில்லை. ஃபிட்டாக இருக்கும் கேப்டன் விராட் கோலி இந்த யோ-யோ டெஸ்ட்டில் சாதாரணமாக 21 மதிப்பெண்கள் எடுக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ரெய்னா, யுவராஜ் ஆகிய இருவருமே கடுமையாக உழைத்து உடலை ஃபிட்டாக்க முயற்சித்து வருகின்றனர். ஜிம்மில் தனது ஒர்க் அவுட் புகைப்படங்களை அவ்வப்போது ரெய்னா பதிவேற்றம் செய்து கொண்டே வந்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடந்த யோ-யோ டெஸ்ட்டில் ரெய்னா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை ரெய்னாவே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு முதல் மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவிருக்கிறது. இதில், ரெய்னா மீண்டும் சென்னை அணிக்காகவே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ரசிகர்களை பொறுத்தவரை இந்திய அணியில் தோனிக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பும் வீரராக வலம் வருபவர் ரெய்னா தான். சென்னை ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட் வீரராக இருப்பவர் ரெய்னா.

தற்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளதால், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளது.

கமான் ரெய்னா!!

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Suresh raina cleared the yo yo test at bengaluru