தற்போது நடைபெற்று வரும் முஷ்டக் அலி டி20 கிரிக்கெட் தொடரில், சுரேஷ் ரெய்னா 49 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசினார்.
முஷ்டக் அலி டி20 தொடரில், இன்று நடந்த பெங்கால் அணிக்கெதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, 49 பந்துகளில் சதம் விளாசினார். மொத்தம் 59 பந்துகளை சந்தித்த ரெய்னா 126 ரன்களை குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 213.56.
இரண்டு ஆண்டு தடைக்குப் பின் மீண்டும் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ளவிருக்கிறது. இதில், சென்னை அணி தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் அணியில் தக்க வைத்துள்ளது. சென்னை அணியைப் பொறுத்தவரை தோனி 'தல' என்றால், ரெய்னா 'குட்டித் தல'. விக்கெட் விழும் போது, குழந்தை போல் துள்ளிக் குதித்து பவுலரை ரெய்னா கட்டியணைக்கும் விதத்திற்கே அவருக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு.
இன்றைய அதிரடி ஆட்டத்தின் மூலம், சென்னை அணி மீண்டும் தன்னை தக்க வைத்ததற்கு, ரெய்னா நியாயம் கற்பித்துள்ளார் என்றே கூறலாம். இதே அதிரடி கண்டினியூ ஆகும் பட்சத்தில், சென்னை அணியில் மட்டுமல்ல, இந்திய அணியிலும் மீண்டும் ரெய்னா இடம் பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை.
சதம் விளாசியதற்கு பின் பேட்டியளித்த ரெய்னா, "சென்னை சூப்பர் கிங்ஸ் தான் எப்போதும் எனது முதல் சாய்ஸ். என்னை மீண்டும் அவர்கள் தக்க வைத்ததற்காக பெருமைப்படுகிறேன். கடந்த சில ஆட்டங்களில் எனது பேட்டிங் ஒர்க் அவுட் ஆகவில்லை. இன்று எனக்கான நாளாக அமைந்துவிட்டது. தோனியுடன் மீண்டும் இணைந்து விளையாட இருப்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார்.
இந்த நிலையில், சமூக தளங்களில் ரெய்னாவின் சதத்தை ரசிகர்கள் 'குட்டித் தல' என்ற ஹேஷ் டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.