Cricket news in tamil: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது டி-20 ஆட்டம் இந்திய நேரப்படி நேற்றிரவு நடந்தது.
நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங் செய்த அந்த அணியினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் என்கிற வலுவான ஸ்கோரை சேர்த்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்தார். லியம் லிவிங்ஸ்டன் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 216 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணியில் டாப் ஆடர் வீரர்களான ரோகித் சர்மா (11), ரிஷப் பண்ட் (1), விராட் கோலி (11) சொற்ப ரன்னில் வெளியேறி பெரும் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், தொடர்ந்து வந்த சூரியகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய அவர் அணி வெற்றி இலக்கை அடைய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அணிக்கு லோ-ஆடரில் வலு சேர்க்கும் தினேஷ் கார்த்திக் (6), ஜடேஜா (7) ஒற்றை இலக்கங்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். எனினும், தனது அதிரடியை நிறுத்தாத சூரியகுமார் சதம் அடித்து மிரட்டினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டபோது, மொயீன் அலி வீசிய பந்தை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டார். அவரின் அசத்தல் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. ஆனால், மொயீன் அலி வீசிய 5வது பந்தில் சூரியகுமார் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
💯
— BCCI (@BCCI) July 10, 2022
A magnificent CENTURY from @surya_14kumar 👏👏
His first in international cricket!
Live – https://t.co/hMsXyHNzf8 #ENGvIND pic.twitter.com/LwZVee9Ali
சூரியகுமார் யாதவ் மிரட்டல் அடி – விராட் கோலி, தினேஷ் கார்த்திக் இனியும் தேவையா?
இந்த ஆட்டத்தில் பல அற்புதமான ஷாட்டுகளை அடித்து ஆட்டத்தை பார்த்தோரின் புருவங்களை உயர்த்த செய்த சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் (48 பந்துகளில்) தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். மேலும் அவர் 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்தார். அவரின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் கூறினர். ஆனால் வெற்றியை ருசித்து அணிக்கே அவ்விருது வழங்கப்படுவது வழக்கம்.
சூரியகுமார் நேற்றைய ஆட்டத்தோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 ஆட்டத்திலும் 39 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், 2வது டி-20 15 ரன்கள் எடுத்திருந்தார். அவரின் இந்த நிலையான ஆட்டம் அணியின் மிடில்- ஆடரில் வலு சேர்க்கிறது. அவருடன் ஹர்டிக் பாண்டியாவும் தனது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர்களின் அதிரடி தொடர்ந்து இந்திய அணியை வேறு எந்த அணியாலும் அசைக்க முடியாது.
An extraordinary shot.
— England Cricket (@englandcricket) July 10, 2022
Scorecard/clips: https://t.co/AlPm6qHnwj
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/JBcZStcP7l
இந்திய அணி நிர்வாகத்தை பொறுத்தவரை, இந்தாண்டு அக்டோபரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ள டி-20 உலககோப்பைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக கடந்த 8 மாதங்களில் நடந்த 30 சர்வதேச ஆட்டங்களில் 40 வீரர்கள் 7 கேப்டன்களை அறிவித்து, சோதனை செய்தும் உள்ளது. இதில் அணி நிர்வாகம் வெற்றி பெற்றதா? என்றால், அதன் சோதனை ஓட்டம் முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு தான் ஒரு முழு விபரம் கிட்டும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து எதிரான தொடரில் பண்ட் தொடக்க வீரராக களமிறப்பட்டு சோதிக்கப்பட்டார். அவரும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவர் பிளே முடிவதற்குள் அவுட் ஆகி இருந்தாலும், ரோகித்துடன் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். இப்படியாக உலக கோப்பை தொடருக்கு என ஒரு வலுவான அணியை உருவாக்கி வரும் இந்தியா நிர்வாகம் ஃபார்ம் – அவுட் ஆனா இந்திய மூத்த வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக, விராட் கோலியின் சமீபத்திய பார்ம், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரின் கடைசி காலத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது. இங்கிலாந்து எதிரான 2 வது டி-20 ஆட்டம் முதல் தொடரில் களமாடி இருந்த கோலி 1 ரன் மட்டுமே எடுத்தார். 3வது ஆட்டத்திலாவது மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகையில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அதிரடி காட்டினார். இதைப் பார்த்த அனைவரும் மிரண்டனர். ஆனால் அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இது அவர் மீது இருந்த ஏமாற்றத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது.
தற்போது உள்ள இளம் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு டாப் ஆடரில் வாய்ப்பு கிடைக்கும் என ஆர்வமாக இருந்து வரும் நிலையில், கோலியின் ஆட்டம், அவருக்கான இந்திய அணி இடம் குறித்து கேள்வி எழுப்புகிறது. மேலும், அவருக்கு தொடர்ந்து கொடுக்கப்படும் வாய்ப்புகள் இளம் வீரர்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளன. கோலிக்கு கேப்டன் ரோகித் எவ்வளவு தான் பேக்-அப் செய்தாலும், 2007 உலகோப்பையில் மூத்த வீரர்களுக்கு என்ன நடந்ததோ அது தான் நடக்கும். இந்த முடிவு அணியின் தேர்வு குழுவிடமும், பயிற்சியாளர் ட்ராவிட்டிடமும் தான் உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி கண்ட மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் அணியில் இடம் பிடித்தார். இந்தத் தொடரில் நடந்த 4 ஆட்டங்களில் 1, 30, 31, 6, 55 என ரன்கள் எடுத்தார். நடந்த முடிந்த இங்கிலாந்து எதிரான டி20 தொடரில் அவரது ரன்கள் 11, 12, 6 ஆக உள்ளன.

தினேஷ், ஐபிஎல் தொடரில் மீண்டெழுந்து வந்த அதே உத்வேகத்தில் இன்றும் விளையாடுகிறார? இந்திய அணியின் தேவையை சரியாக பூர்த்தி செய்கிறாரா? அணியில் ஹர்டிக் பாண்டிய, ரவீந்தர ஜடேஜா, அக்சர் படேல், வெங்கடேஷ் ஐயர் என பல இளம் ஆல்ரவுண்டர் வீரர்களும், ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட விக்கெட் கீப்பர்களும் உள்ள நிலையில் அவர் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரா? அவர் ஒரு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடினார் என்பதால் அவருக்கு மட்டும் தொடர் வாய்ப்புகள் கொடுப்படுவது ஏன்? என பல கேள்விகள் அவரை சுற்றி சுழல்கின்றன. இதற்கு எதிர் வரும் தொடர்களில் அவர் தான் பதிலளிக்க வேண்டும். மேலும் அவர் டி-20 உலகோப்பையில் ஆட தகுதியானவர் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil