India Playing 11 For T20 World Cup 2022 Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம்
இந்த உலககோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டி-20 உலக கோப்பை: இந்திய அணி
நடப்பு உலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். கேஎல் ராகுல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் போன்ற பேட்ஸ்மேன்கள் அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள். பந்துவீச்சாளர்களில், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் உள்ளனர். தற்போது டி20 உலகக் கோப்பைக்கான வலிமையான இந்தியா ஆடும் லெவன் அணியை இங்கே பார்க்கலாம்.
ரோகித் சர்மா
நடப்பு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். அணி தொடக்க வீராகவும் இருந்து வரும் அவர், சமீபத்தில் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் 3 ஆட்டங்களில் 43 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு ஆட்டங்களில் டக் அவுட் ஆகியிருந்த அவர் ஒரு போட்டியில் மட்டும் 43 ரன்கள் எடுத்தார்.
இந்த தொடருக்கு முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஐ தொடரில், கேப்டன் ரோகித் 3 ஆட்டங்களில் 74 ரன்கள் எடுத்தார் மற்றும் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
உலகக் கோப்பையைப் பொறுத்தவரை கேப்டன் ரோகித் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். எப்போதும் அவர் காட்டும் அதிரடி ஆட்டமும் அணிக்கு தேவை. ஒரு முனையில் அவர் காட்டும் அதிரடி, மறுமுனையில் இருக்கும் வீரர்களுக்கும், டக்-அவுட்டில் இருக்கும் வீரர்களுக்கும் உற்சாகம் அளிக்கும். எனவே, கேப்டன் ரோகித் நல்ல தொடக்கம் கொடுப்பது அவசியமாகும்.
கே.எல் ராகுல்
கே.எல் ராகுல் இந்தியாவின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக இருப்பார். நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 108 ரன்கள் எடுத்தார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 66 ரன்கள் எடுத்து இருந்தார். எனவே, ராகுல் அதே உத்வேகத்துடன் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி
உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி ஒன்-டவுன் பேட்ஸ்மேனாக களமாடுவார். சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரில் கோலி தனது ஃபார்மை மீட்டெடுத்து இருந்தார். இதேபோல், ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 76 ரன்கள் குவித்த கோலி, ஒரு போட்டியில் 61 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடன் 2 ஆட்டங்களில் 52 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார் கோலி.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார். அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்கி அள்ளும் அவரது எக்ஸ்பேக்டர் பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தரும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 59.50 சராசரியிலும் 195+ ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடி இருந்த அவர் 119 ரன்கள் எடுத்திருந்தார். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 3 ஆட்டங்களில் 115 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் ஹர்திக் பாண்டியா அணியின் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 105 ரன்கள் எடுத்து இருந்த அவர் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. பிறகு, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
பாண்டியா தனது ஃபார்மை மீட்டெடுத்து இந்திய அணிக்கு திரும்பியது முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அற்புதமான பேட்டிங் ஃபார்ம் இந்திய மிடில்-ஆடருக்கு நல்ல பலம் சேர்க்கும். அவரின் விக்கெட் வீழ்த்தும் திறனும் இந்திய அணிக்கு உதவும் என்பதால், அவர் தவிர்க்க முடியதா வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட் என்கிற விவாதம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஆடும் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் தான் இடம் பிடிக்கத் தான் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட்டில் ஃபினிஷராக உருவெடுத்துள்ள தினேஷ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்களில் 17 ரன்கள் எடுத்தார். அவர் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ஆட்டத்தில், அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி ஓவரில் அவர் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை விளாசினார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில், அவர் 2 ஆட்டங்களில் 63 ரன்கள் எடுத்தார், ஒரு போட்டியில் 46 ரன்கள் எடுத்தார். தற்போது ஃபினிஷர் ரோலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் களமாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
சுழற்பந்துவீச்சு வரிசை
அக்சர் படேல் - யுஸ்வேந்திர சாஹல்
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் ஆஸ்திரேலியா டி20ஐக்கு எதிரான தொடரின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 3 ஆட்டங்களில் 7.87 சராசரியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, அவர் 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அக்சர் படேலுடன் ஆடும் லெவனில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் இடம் பிடிப்பார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்களில் சாஹல் சராசரியாக 38.0 மற்றும் 9.12 எக்கனாமியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வேகப்பந்து வீச்சு வரிசை
புவனேஷ்வர் குமார் - ஹர்ஷல் படேல் - அர்ஷ்தீப் சிங்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், வேகப்பந்து வீச்சு வரிசையை புவனேஷ்வர் குமார் இம்முறை வழிநடத்துவார். பும்ராவுக்கு பதில் முகமது ஷமி இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவரும் புவியுடன் இணைந்து கலக்குவார் என்று தெரிகிறது.
புவனேஷ்வர் குமார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆட்டங்களில் 91.0 சராசரி மற்றும் 13.0 என்ற எக்கனாமியில் 1 விக்கெட் எடுத்தார். மேலும் அவர் தனது பந்துவீச்சு வரலாற்றிலே அதிக ரன்களை வாரிக்கொடுத்தது இந்த தொடரில் தான். இருப்பினும், அவர் நடப்பாண்டில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். தொடர் நாயகன் விருதை பல முறை வென்றவராகவும் அவர் இருக்கிறார்.
ஹர்ஷல் படேல் அணிக்கு மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக இருப்பார். ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாததால், அணியில் இருக்கும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் படேலும் ஒருவர். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 ஆட்டங்களில் 1 விக்கெட் வீழ்த்தினார்.
அர்ஷ்தீப் சிங் 3வது வேகப்பந்து வீச்சாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் டி-20யில் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் 2 ஆட்டங்களில் சராசரியாக 18.80 மற்றும் 11.75 என்ற எக்கனாமியில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.