ரஷித்கான் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஏ பிரிவின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இந்த போட்டியில் பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 168 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் ஒரு கட்டத்தில் விக்கெட் சரிவை சந்தித்து. ஆனால் இறுதிகட்டத்தில் ரஷித்கான் அதிரடியாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில், 16 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
கடைசிவரை வெற்றிக்காக போராடிய ரஷித்கான், 23 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட ஆப்கானிஸ்தான் அணி டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் பி பிரிவில் தனது 5 போட்டிகளையும் முடித்துவிட்ட ஆஸ்திரேலியா அணி 3 வெற்றி ஒரு தோல்வி ஒரு முடிவில்லை என 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதே பிரிவில் 7 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் அரையிறுதி தகுதி இன்னும் இழுபறியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் ரன்ரேட்.
5 போட்டிகளில் ஆடி 3 வெற்றி ஒரு தோல்வி ஒரு முடிவில்லை என 7 புள்ளிகள் பெற்றுள்ள நியூசிலாந்து அணி +2.113 ரன்ரேட் பெற்றுள்ளது. இனி வரும் இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும் நியூசிலாந்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தார். அதே சமயம் நியூசிலாந்து அணியுடன் சமமான புள்ளிகளை பெற்றிருந்தாலும், -0173 ரன்ரேட் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி ஒரு தோல்வி ஒரு முடிவில்லை என 5 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணி +0.547 ரன்ரேட் பெற்றுள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தினாலே 7 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடலாம். மாறாக தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
இடையில் 4 போட்டிகளில் தலா2 வெற்றி 2 தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை அணி தற்போது தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால், கடைசிபோட்டியின் வெற்றி தோல்வி அந்த அணியை எந்த வகையிலும் பாதிக்காது. சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னெற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியின் தோல்வியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.