Mohammed Shami - T20 World Cup Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
ஷமியை கழற்றி விட்ட இந்திய நிர்வாகம்
இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தவுள்ளார். துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் கேப்டன் கோலியும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் பேட்டிங் வரிசையை வலு சேர்க்க சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும், ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டுள்ளார். சுழலில் கலக்க ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் போன்றோரும், வேகப் பந்துவீச்சிற்கு ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.
ஷமிக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்படாததது குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது. அவருக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் தொடர்ந்து பேசி வந்தனர். இதனால் கடும் அழுத்தம் அடைந்த இந்திய அணி தேர்வுக் குழு அவரை காத்திருப்பு வீரராக தேர்வு செய்கிறோம் என்று தெரிவித்தது. இதனையடுத்து ஷமி இந்திய அணியில் காத்திருப்பு வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு - ஆஸி,. தெ.ஆ தொடரில் விலகல்
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய வென்றது. இந்த தொடரில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அப்படியே விளையாடி இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முகமது ஷமியால் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை.
தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், ஷமி இன்னும் கொரோனா பாதிப்பில் முழுமையாக குணமாகாததால் அவர் இந்த தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு பதிலாக விளையாடிய உமேஷ் யாதவ் இந்த தொடரிலும் ஆட இருக்கிறார். உலகப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷமி மீண்டும் உடற்தகுதி பெறுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா ஷமியை சேர்க்க வாய்ப்புள்ளதா? ஐசிசி விதி என்ன சொல்கிறது?
அப்படி ஷமி குணமடையும் பட்சத்தில், அவர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருந்து 15 பேர் கொண்ட அணியில் இணைய வாய்ப்புள்ளது. அது எப்படி என்றும், ஐசிசி விதி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
நடப்பு டி-20 உலக கோப்பையில் பங்கேற்கும் அனைத்து 16 அணிகளும் தங்கள் அணிகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. இருப்பினும், அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் ஒருவேளை காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அக்டோபர் 9 வரை அதில் மாற்றங்களைச் செய்ய அணி நிர்வாகத்திற்கு வாய்ப்பு உள்ளது. எனினும், ஏற்கனவே கொடுத்த காலக்கெடுவுக்குப் பிறகு, அவர்கள் திருத்தம் செய்ய ஐசிசியின் அனுமதியைப் பெற வேண்டும்.
இந்த விதியின் படி ஷமி இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ற மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.