Advertisment

சிங்கம் சிங்கம் தான்… பாகிஸ்தானை பந்தாடிய 'கிங்' கோலி!

கோலி இதை 19வது ஓவரின் தொடக்கத்திலே செய்யவார் என்று எதிர்பார்க்கையில் அவர் அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு மிரட்டினார்.

author-image
Martin Jeyaraj
New Update
Chasing master king Kohli Tamil News

Chase thriller written and directed by Virat Kohli Tamil News

IND vs PAK  T20 World Cup 2022: Virat Kohli Tamil News: 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை மெல்போர்னில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து,160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisment

பாகிஸ்தானை பந்தாடிய 'கிங்' கோலி

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய போது, பவர்-பிளே முடிவதற்குள் கேப்டன் ரோகித் (4), ராகுல் (4), மற்றும் சூரியகுமார் யாதவ் (15) ஆகிய 3 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது. போதாக்குறைக்கு, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல், பவர்-பிளே முடிந்த அடுத்த ஓவரின் முதல் பந்திலே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதன்பிறகு வந்த ஹர்திக் பாண்டியாவுடன் களத்தில் இருந்த கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தை மிதவேகத்தில் நகர்த்திய நிலையில், 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 45 ரன்கள் மட்டும் தான் எடுத்து இருந்தது. இதனால், இந்த ஜோடியில் யார் அடித்து ஆடுவார்? என்ற கேள்வி தொற்றிக்கொண்டது. வழக்கம் போல் கோலி தான் அடித்து ஆடுவார். பாண்டியா எப்போதும் போல் பினிஷிங் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இப்படி யோசித்துக் கொண்டிருகையில் 2 ஓவர்கள் உருண்டோடின.

publive-image

இப்போது இந்த ஜோடியில் யாரவது ஒருவர் பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கியே ஆக வேண்டும். அதை யார் முதலில் செய்யப் போவது? என்று எதிர்பார்த்த நேரத்தில் முகமது நவாஸ் வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டல் விடுத்தார் பாண்டியா. அப்படியென்றால், இனி அவர்தான் அடித்து ஆடப்போகிறாரா? என்று யோசித்த இடைவெளியில், கோலி தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். மீண்டும் அடுத்த பந்தில் பாண்டியா ஒரு சிக்ஸரை விளாசினார்.

இருவரும் மாறி மாறி அடித்து நொறுக்குவதைப் பார்க்கையில், ஒருவேளை இருவரும் அடித்து ஆடப் போகிறார்கள் என்றும், அல்லது அவர்கள் நாவாஸ் போன்ற பந்துவீச்சாளரை டார்கெட் செய்து அடிக்கப்போகிறார்கள் என்றும் எண்ண ஓட்டங்கள் இருந்தது. அவர்களும், அது போன்ற பந்துகளுக்காக காத்திருந்தனர். அப்படி அவர்கள் எதிர்பார்த்ததை 14வது ஓவரை வீசிய ஷதாப் கான் கொடுத்தார். ஆனால், அவர் கொடுத்ததோ ஒரே ஒரு பவுண்டரி தான். அதை விரட்டிய கோலி, அதன்பிறகு நசீம் ஷா வீசிய 15வது ஓவரில் தான் ஒரு பவுண்டரி அடித்தார்.

publive-image

இதற்கிடையில் கோலியுடன் ஜோடியில் இருந்த பாண்டியா பெரிய ஷாட்களுக்கு முயற்சி செய்தாலும், அவை பலன் கொடுக்கவில்லை. எனவே, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஏதேனும் தவறு செய்வார்களாக? என்று காத்திருந்தார். அப்படி 16வது ஓவரை வீசிய ஹரீஸ் ரவூப் எதையும் செய்யவில்லை. 17வது ஓவரில் நசீமும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையும் படியுங்கள்: முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்: இன் ஸ்விங்கருக்கு பலியான பாபர் அசாம்

இப்போது இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், அதிரடியை தொடங்க வேண்டிய காட்டயத்திற்கு இரு வீரர்களும் தள்ளப்பட்டனர். அப்போது 18வது ஓவர் வீசிய ஷாஹீன் அப்ரிடியின் முதல் பந்தில் ஷார்ட் மிட்விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டி தனது அரைசதத்தை பதிவு செய்தார் கோலி. பிறகு 3வது மற்றும் கடைசி பந்தில் 2 பவுண்டரிகளை விரட்டினார். பின்னர் கோலி, சிக்ஸர் பறக்கவிட நினைத்து கிடைக்கும் பந்துகளையெல்லாம் விரட்டுகிறார். ஆனால், அவற்றில் சில சிக்காமலும், லாங் ஆனில் அடிக்கப்படுவதாலும் பவுண்டரி எல்லையை தொடாமல் போயிடுகிறது.

publive-image

சரி, 2, 2 ரன்களாக ஓடி எடுக்கலாம் என்றால், முழங்கால் மூட்டு வலியால் அவதியுறும் பாண்டியாவால் ஓட முடியவில்லை. ரவுஃப் போலவே, ஷாஹீனும் ஹார்ட் லெந்த் பந்துகளை வீசவே, பாண்டியாவால் அதை அடித்து ஆட முடியவில்லை. ஒருவேளை அவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நவாஸின் கடைசி ஓவருக்காக அல்லது தவறிழைக்கும் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவருக்காக காத்திருகிறார் போல என்றானது. எனவே, கோலி தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டது.

கோலியின் சிந்தனைக்கு ஏற்ப 18வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை விரட்டினார். இதை 19வது ஓவரின் தொடக்கத்திலே செய்யவார் என்று எதிர்பார்க்கையில் அவர் அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு மிரட்டினார். சற்றும் எதிர்பாராத ஹரிஸ் ரவூப் திகைத்துப்போய் நின்றார். கோலியின் இந்த விளாசல் அடுத்த ஓவரில் அவர் மீதும், பாண்டியா மீதும் இருந்த அழுத்தத்தை குறைத்தது, ரசிகர்கள் முகத்திலும் புன்னகையை தவழ விட்டது.

இப்போது இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை முகமது நவாஸ் வீசினார். இதில் முதல் பந்தை சந்தித்த பாண்டியா (40 ரன்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது பந்தை எதிர்கொள்ள வந்த தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்து கோலி வசம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். கோலி 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். தற்போது இந்தியாவின் வெற்றிக்கு 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படியுங்கள்: முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்: இன் ஸ்விங்கருக்கு பலியான பாபர் அசாம்

இந்த ஆட்டத்தை ஏற்கனவே பரபரப்பாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு மேலும் பரபரப்பைத் தான் ஏற்படுத்தியது. வழக்கம் போல் ரசிகர்களை பி.பி மாத்திரைகளை தேடும் அளவிற்கு ஆட்டமும் நகர்ந்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் 4வது பந்தை சந்தித்த கோலி லெக் சைடில் ஒரு சிக்ஸர் பறக்க விட்டார். அப்போது தான் பலரும் பெருமூச்சு விட்டனர். அந்த பந்து நோ-பால் என்று நடுவர் சைகை காட்ட, ரசிகர்கள் குஷியாவிட்டார்கள்.

ஃப்ரீ ஹிட் பந்தை முகமது நவாஸ் ஒய்டாக வீச, 'கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா?' என்பது போல் இருந்தது. அவர் வீசிய ரீ பால் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஃப்ரீ ஹிட் பந்தில் தான் போல்ட்-அவுட் இல்லையே என்பதை உணர்ந்த கோலி, அடுத்த கணமே மறுமுனையை நோக்கி ஓட்டம் பிடித்தார். தினேஷ் கார்த்திக்கும் அவருக்கு ஈடு கொடுத்து ஓடினார். கடைசியில் 3 ரன்கள் கிடைத்துப்போனது. தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. எனவே, இனி இந்தியாவுக்கு வெற்றி எளிதில் கிடைத்து விடும் என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், ஆட்டம் இன்னும் முடிவில்லை என்பதை காட்ட, 5வது பந்தில் தினேஷ் கார்த்திக் கீப்பர் ரிஷ்வானால் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்: IND vs PAK: பட்டையை கிளப்பிய கோலி, ஃபினிஷிங் கொடுத்த அஸ்வின்… இந்தியாவுக்கு திரில் வெற்றி!

பின்னர், ஆட்டத்தின் கடைசி பந்தை சந்திக்க களமாடிய அஸ்வின் லெக் சைடில் வீசிய பந்தை சற்று விலகி ஒய்டு விட்டார். மீண்டும் வீசப்பட்ட அந்த கடைசி பந்தை அஸ்வின் கவரில் லாவகமாக தூக்கி அடித்தார். இந்தியாவுக்கு திரில் வெற்றி கிடைத்தது. ரசிகர்கள் குதூகலத்தில் திகைத்தார்கள். அஸ்வினின் இந்த நுணுக்கமான ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்காக என இருந்தாலும், கோலியின் உழைப்பிற்காகவும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கோலி கொண்டிருந்த தீர வேட்கைக்கும் அவர் செலுத்திய சமர்ப்பணமாக இருந்தது.

publive-image

முன்பு கோலிக்கெதிராகவும், அவரது ஃபார்ம் குறித்தும் விமர்சனங்களை கொட்டி தீர்த்த மற்றும் பக்கம் பக்கமாக எழுதிய அந்த மாமனிதர்களுக்கு அவர் தனது பிரமிப்பூட்டும் ஆட்டத்தால் பதிலடி கொடுத்திருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில், அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக அவரின் இந்த சிறப்பான மற்றும் தரமான ஆட்டம், அவர் வெறும் 'விராட் கோலி' அல்ல. அவர் எப்போதும் 'கிங்' கோலி தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். வயசானாலும் சிங்கம் சிங்கம் தானே!!!

publive-image
publive-image

இதையும் படியுங்கள்: IND vs PAK: பட்டையை கிளப்பிய கோலி, ஃபினிஷிங் கொடுத்த அஸ்வின்… இந்தியாவுக்கு திரில் வெற்றி!

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup India Vs Pakistan Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment