Pakistan vs New Zealand {PAK vs NZ} T20 world cup Semi final Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் சிட்னியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகியுள்ளனர்.
உலகக் கோப்பை அரையிறுதியைப் பொறுத்தவரை, நியூசிலாந்து அணி பாகிஸ்தானை இதுவரை ஒரு முறை கூட வென்றதில்லை. கடந்த 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்த மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த ஆட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1992: மார்ட்டின் குரோவின் கனவை முடிவுக்குக் கொண்டுவந்த இன்சமாம்
5வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பிப்ரவரி 22 முதல் மார்ச் 25, 1992 வரை நடைபெற்றது. இதன் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில், ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ட்டின் குரோவ் 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் என 91 ரன்கள் குவித்தார். கென் ரூதர்ஃபோர்ட் 50 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக வாசிம் அக்ரம் மற்றும் முஷ்டாக் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 263 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் ரமீஸ் ராஜா – கேப்டன் இம்ரான் கான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரமீஸ் ராஜாவின் விக்கெட்டுக்கு பிறகு களமாடிய ஜாவேத் மியான்டத் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில் அவருடன் ஜோடியில் இருந்த இன்சமாம்-உல்-ஹக் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டி அணியின் வெற்றியை உறுதி செய்யும் முன் ரன்-அவுட் ஆனார். எனினும் அவரது அதிரடி ஆட்டம் பாகிஸ்தான் அரையிறுதியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த உதவியது. பின்னர் நடந்த இறுதிப் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி முதல் முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது.

1999 ஒருநாள் உலகக் கோப்பை: மான்செஸ்டரில் மிரட்டிய சோயப்-அன்வர் ஜோடி
7வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடத்தப்பட்டது. ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணை-ஹோஸ்ட்ளாக செயல்பட்டன. இதன் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்ற நிலையில், அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரோஜர் டூஸ் 46 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சோயப் அக்தர் 3 விக்கெட்டுகளையும், அப்துல் ரசாக் மற்றும் வாசிம் அக்ரம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரான வஜஹத்துல்லா வஸ்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இருந்தார். 123 பந்துகளில் ஒரு சிக்ஸர் 10 பவுண்டரிகளை விளாசி இருந்த அவர் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், அவருடன் ஜோடியில் இருந்த சயீத் அன்வர் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.மேலும், பின்னர் வந்த இஜாஸ் அகமதுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 148 பந்துகளில் 9 பவுண்டரிகளை விரட்டிய அன்வர் 113 ரன்கள் எடுத்து இருந்தார்.
பந்துவீச்சில் சோயப் அக்தர் மிரட்ட, பேட்டிங்கில் சயீத் அன்வர் அதிரடி காட்ட வெற்றியை உறுதி செய்த பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
2007 டி20 உலகக் கோப்பை: கேப்டவுனில் மாயம் செய்த உமர் குல்
டி20 உலகக் கோப்பை தொடர் 2007 ஆம் ஆண்டில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டது. இந்த தொடரின் முதல் பதிப்பு தென் ஆப்ரிக்க மண்ணில் நடைபெற்றது. இதன் முதல் அரையிறுதி போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டேனியல் வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 37 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய உமர் குல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஃபவாத் ஆலம் 2 விக்கெட்டுகளையும், ஷாஹித் அப்ரிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 144 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளையும் மட்டும் இழந்து 18.5 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்ரான் நசீர் 59 ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை எதிர்கொண்ட நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம், முதல் டி20 உலகக் கோப்பை எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி முத்தமிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil