IND vs PAK: Mohammad Shami - Babar Azam Tamil News: கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கிய 8 -வது டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் பரபரப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில் 16 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
இந்த உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் வருகிற சனிக்கிழமை (அக்டோபர் 22 ஆம் தேதி) முதல் தொடங்குகின்றன. சிட்னியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மறுநாள் ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.
மழை குறுக்கீடு - பயிற்சி ஆட்டங்கள் ரத்து
இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு இருந்தன. ஆஸ்திரேலியா உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து நேற்று நியூஸிலாந்துடன் நடவிக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழைப் பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மறுபுறம், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து உடனான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் தோற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி 155 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தியது. அப்போது பாகிஸ்தான் 2.2 ஓவரில் 19 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
நெட்டில் 45 நிமிடம் பயிற்சி செய்த கேப்டன் பாபர்
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் அதிரடித் தொடக்க வீரரான கேப்டன் பாபர் அசாம் நடப்பு உலகக் கோப்பை தொடருக்காக 45 நிமிடங்களுக்கு மேல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் வருகை அணிக்கு உத்வேகம் கொடுத்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் தனது கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருந்தார். அவர் அந்த ஓவரில் வீசிய அனைத்து பந்துகளும் ஷார்ட் மற்றும் யார்க்கர் பந்துகள். அதை சமாளிக்க திணறிய ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணியினர் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Shaheen Afridi and Mohammad Shami exchanged bowling tips during net sessions in Brisbane. #T20WorldCup pic.twitter.com/rM3pHiTWDM
— Arfa Feroz Zake (@ArfaSays_) October 17, 2022
ஆனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு அவரின் இந்த தரமான ஃபார்ம் அடி வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. குறிப்பாக, ஷார்ட் பந்துக்கு எதிராக தடுமாறும் கேப்டன் பாபருக்கு ஷமியின் பந்தை சமாளிப்பதில் சிறிது பயம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதை சமாளிக்கவே அவர் 45 நிமிடங்களுக்கு மேல் தனது வலைப் பயிற்சியில் செலவிட்டு வருகிறார்.
ஆலோசனை கொடுத்த மேத்யூ ஹைடன்
இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியைப் பொறுத்தவரை, தனது ஆயுதக் களஞ்சியத்தில் ஷார்ட் பந்தை சக்திவாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது ஆறு பந்துகளில் 3 யார்க்கர்களும் அடங்கும். அவர் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளும் கவனிக்கப்பட வேண்டியவை. இதனை கருத்தில் கொண்ட பாகிஸ்தானின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன், வலைப்பயிற்சியில் பாபர் ஆசாமுடன் கணிசமான நேரம் பேசினார். அப்போது ஹைடன் ஷார்ட் பிட்ச் பந்துகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த தனது நிபுணத்துவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், வலைப்பயிற்சியின் போது பவுன்சர்கள் மற்றும் ஷார்ட் பந்துகளை வீச பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஷார்ட் பந்து வீச்சுகளை ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக உருவாக்கியுள்ளனர் என்பதை பாகிஸ்தான் பேட்டர்கள் நன்கு அறிவார்கள். சமீபத்திய தொடரில் இதுபோன்ற பந்து வீச்சுகளால் ஆஸ்திரேலிய மற்றும் தென்ஆப்பிரிக்க பேட்டர்களை இந்திய வீரர்கள் தொந்தரவு செய்தனர். இந்தியாவின் வழக்கமான வேக தாக்குதலைத் தவிர, ஹர்திக் பாண்டியாவும் அத்தகைய நுட்பத்தை கடைபிடித்து வருகிறார்.
India didn’t practice today but Pakistan did. https://t.co/6apc0avgvN watch how Babar was batting. #CricketTwitter pic.twitter.com/mFH97Dkcd3
— Vimal कुमार (@Vimalwa) October 18, 2022
பாபர் ஆசாமின் ஷார்ட் பிட்ச் பயிற்சி:
கேப்டன் பாபர் அசாம் கடந்த காலங்களில் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுகளுக்கு எதிராக போராடினார். இது சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் தெளிவாகத் தெரிந்தது. ஹர்திக் பாண்டியாவைத் தவிர முகமது ஷமிக்கு ஷார்ட்-பால் ஆயுதம் இருப்பதால், பாபர் அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மற்றொரு காரணம், பாகிஸ்தான் நியூசிலாந்தில் வித்தியாசமான பவுன்ஸுடன் விளையாடியது. ஆஸ்திரேலியாவில், இது மீண்டும் வித்தியாசமாக இருக்கும். எனவே பவுன்ஸுக்கு ஏற்றவாறு பாகிஸ்தான் வலைப்பயிற்சி செய்து வருகிறது.
தவிர, கடந்த திங்களன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் போட்டியை பாகிஸ்தான் மைதானத்தில் இருந்து பார்த்தது. முகமது ஷமி வெறும் 1 ஓவரில் 3 அற்புதமான யார்க்கர்களை வீசியதால், அவர் மீண்டும் வரத் தயாராக இருக்கிறார் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். எனவே, பாகிஸ்தான் அதை குறைவாக மதிப்பீடாமல், பயிற்சி செய்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.