T20 World Cup 2022: India vs Pakistan Match Prediction Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், அவை இன்றுடன் நிறைவடைந்தன. இந்த தகுதி சுற்றின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் உள்ளன. இவற்றுடன் இந்த 4 அணிகளும் சேர்க்கப்பட்டு, இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் லீக் போட்டியில் வருகிற ஞாயிற்று கிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்: மோதல் எப்படி இருக்கும்?
நடப்பு டி-20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அவரே வழிநடத்தி இருந்த நிலையில், தொடக்க ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. ஆனால், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால், தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்த காயத்தில் இருந்து வெளியேறி வரவும், வடுகளுக்கு மருந்து போடும் விதமாகவும், இந்த டி-20 உலக கோப்பைக்கு என கடுமையாக உழைத்தும், பயிற்சி செய்தும் வருகிறது. தவிர, கடந்த டி-20 உலக கோப்பையில் இந்திய அணியை அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்த வரை, சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களை கைப்பற்றிய அதே உத்வேகத்தில் களமிறங்கும். இந்திய அணியில் கேப்டன் ரோகித், கேஎல் ராகுல், விராட் கோலி சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். குறிப்பாக மிடில்-ஆடரில் களமாடும் சூர்யகுமார் யாதவ் மிரட்டல் ஃபார்மில் உள்ளார்.
சுழலில் மிரட்ட அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்களும், வேகக் தாக்குதல் தொடுக்க ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்திய அணியில் இடம்பிடித்த ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வேகம் மற்றும் பவுன்ஸ் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷமி ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இதனால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அவர்கள் தொடரை இழந்தனர். ஆனால், அந்த தொடர் மிக நெருக்கமான மோதலாக இருந்தது.
எனினும், பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் பங்கேற்ற முத்தரப்பு தொடரை வென்றது. இந்த வெற்றி அந்த அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆனால், அந்த அணி பேட்டிங்கில் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரைத் தான் அதிகம் நம்பியுள்ளது. மிடில் – ஆடரில் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் உள்ளனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய மைதானங்களில் அவர்களின் அனுபவம் குறைவு தான்.
பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இணைந்துள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது. அந்த அணி மிடில்-ஆர்டரில் உள்ள பிரச்சினைகளைக் களையும் பட்சத்தில், சம பலம் பொருந்திய அணியாக மாறும். அது இந்தியாவுக்கு கடும் சாவல் கொடுக்கும். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பாகிஸ்தான் கடும் போட்டியை கொடுக்கவே தீவிரமாக போராடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil