T20 World Cup 2022 – Indian cricket team Tamil News: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது டி-20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 12 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், நாளை பெர்த் மைதானத்தில் மாலை 4:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா – தென்ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
India vs South Africa: இந்திய அணியின் பலவீனங்கள் என்ன?
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி, 4 புள்ளிகளுடன் குழு-2ல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பந்துவீசிய நிலையில், மிகத்துல்லியமாக வேகத்தாக்குதல் தொடுத்த அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். இதேபோல், மிடில்-ஓவர்களில் பாஸ்கிதான் பேட்ஸ்மேன்களை திணற செய்த ஹர்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷமி மற்றும் புவி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 159 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு மிரட்டலாவும், மிடில்-ஓவர்களில் அசத்தலாகவும் இருந்தது. ஆனால், டெத் ஓவர்களில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை கசிய விட்டனர். இதனால், 140 ரன்னில் மடக்கப்பட வேண்டிய பாகிஸ்தானின் ஸ்கோர் 159 -தை எட்டியது. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களின் தரமான பந்துவீச்சை தொடக்க ஓவர்களில் வெளிப்படுத்தினாலும், டெத் ஓவர்களில் அவை தலைகீழாக மாறிவிடுகிறது. இதே நிலை தான் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களிலும் நடந்தது.
தொடர்ந்து 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா (4), ராகுல் (4) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தனர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால், ராகுல் மீண்டும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார். அவரின் இந்த நிலையற்ற ஆட்டம், அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் நிர்வாகத்தின் மீது கேள்விக் கணைகளை தொடுக்க வழிவகை செய்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்னில் அவுட் ஆகிய சூரியகுமார் நெதர்லாந்து உடனான ஆட்டத்தில் 51 ரன்கள் எடுத்து மீண்டெழுந்தார். விராட் கோலி இந்த இரு ஆட்டங்களிலும் பாராட்டு மழை பொழியும் அளவிற்கு 82 மற்றும் 62 ரன்கள் என தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மட்டையைச் சுழற்றியதை எந்தவொரு கிரிக்கெட் ரசிகரும் அவரது வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அவரின் இந்த மிரட்டல் ஆட்டம் தொடரும் பட்சத்தில் தொடரின் நாயகனாக அவர் ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணியின் தொடக்க வரிசை சோதிக்கப்பட்ட நிலையில், மிடில்-ஆடர் அதிகம் சோதிக்கப்படவில்லை. தொடக்க ஆட்டத்தில் அக்சர் படேல் களமாடியது, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து என சிறிய சோதனை ஓட்டமே நடந்துள்ளது. பாகிஸ்தானை வீழ்த்த உதவிய அஸ்வின் இனி வரும் போட்டிகளிலும் அப்படியே செயல்படுவாரா? இந்திய அணியின் லோ-ஆடரில் உள்ள வீரர்கள் அணியின் வெற்றிக்கு கை கொடுப்பார்களாக? என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன. எனினும், இனி வரும் போட்டிகளில் அவற்றை இந்திய அணி சரி செய்தால், அணி கோப்பையை முத்தமிடும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil