உலக அரங்கில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் இந்திய உலகின் எந்த அணிக்கு எதிரான விளையாடினாலும் அந்த போட்டி பெரும் வரவேற்பை பெற்று வருவது தொடர்ந்து வருகிறது. இப்படி உலகளவில் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் இந்தியா முதன் முதலில் சர்வதேச போட்டிகளை விளையாட தொடங்கியது எப்போது தெரியுமா?
கிரிக்கெட் போட்டியை கண்டுபிடித்த நாடு இங்கிலாந்து என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு அச்சாரம் போட்டது இந்தியா தான் என்று ஒரு பேச்சு உள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விளையாடப்படும் கெட்டிப்புல் தான் கிரிக்கெட் போட்டியாக உருவெடுத்துள்ளது என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட கிரிக்கெட் போட்டியை இந்தியா 1932-ம் ஆண்டு சர்வதேச அளவில் விளையாட தொடங்கியது.
இந்தியாவுக்கு ஐசிசி முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கியதை தொடர்ந்து ஆல் இந்தியா என்ற பெயரில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் முதல் தர போட்டிகள் உட்பட மொத்தம் 37 போட்டிகள் நடைபெற்றது. 1932-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ந் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில், மழை காரணமாக 2 முதல் தர போட்டிகள் ஒரு பந்துகூட விசப்படாமல் கைவிடப்பட்டது.
மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி 9 வெற்றி 8 தோல்வி பெற்ற நிலையில், 9 டிரா ஆகியுள்ளது. இந்த போட்டிகள் அனைத்திற்கும், போர்பந்தர் மகாராஜா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு சிகே.நாயுடு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவே இந்திய அணி சர்வதேச அளவில் விளையாடி முதல் போட்டி.
இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டியூக்லஸ் ஜார்டின் 180 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். லஸ் அமீஸ் 65 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது நாசர் 26 ஓவர்களில் 93 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியாவின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சார் முகமது நிசார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 189 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சி.கே.நாயுடு 40 ரன்களும், ஜோயோமோல் 33 ரன்களும், சையத் வாசிர் அலி 31 ரன்களும் எடுத்தனர். 70 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 275 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் இந்திய அணியின் ஜஹாங்கீர்கன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 346 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 187 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அடுத்து 1933-34ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாட இந்தியாவுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் முகமது மீண்டும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தச் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து வென்றிருந்தாலும், நிசார் 117 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் முக்கிய வீரராக ஜொலித்தார். 1936 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின்போது டெஸ்ட் கிரிக்கெட்டை 10 ஆண்டுகள் தடை செய்யப்பட்து.
அதற்கு முன்பாக இந்தியா கடைசியாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில் நிசார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் சுற்றுப்பயணம் முடிவதற்குள் அவரது பணி காரணமாக இந்தியன் ரயில்வேயால் நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டார். இதுவே நிசாரின் கடைசி போட்டியாகவும் அமைந்தது. அறிமுக போட்டி மற்றும் தனது கடைசி போட்டி என இரண்டிலுமே நிசார் 5 விக்கெட் வீழ்த்தி முக்கிய வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.
தனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த முகமது நிசார் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்திருந்தாலும், சுதந்திரத்திற்கு பின் அவர் பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்துள்ளார். 1932-36 ஆண்டு வரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55 ரன்களும், 25 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
முகமது நிசார் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் 1932 காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தனது வேகப்பந்துவீச்சாள் கதிகலங்க வைத்த இங்கிலாந்து அணியின் ஹரோல்ட் லார்வுட்டை விட வேகமாக பந்துவீசும் திறன் கொண்டவர் முகமது நிசார் என்று அன்றைய இந்திய அணியின் கேப்டன் சிகே நாயுடு கூறியுள்ளார். நிசார் தனது 52 வயதில் 1963-ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி பாகிஸ்தான் லாகூரில் மரணமடைந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.