இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் கொண்ட விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டிக்கு முதல் இடம் உண்டு. அதேபோல் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் தங்களது பொழுதுபோக்காக கிரிக்கெட் விளையாடுவதும், டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதும் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் உலகளவில் இந்தியா விளையாடும்போட்டிகள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் அதே நேரத்தில் இதில் சாதனை படைக்கும் வீரர்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக ஒரு வீரர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும்போது முதல் போட்டியில் அவரது ஆட்டம் அடுத்தடுத்த போட்டிகளில் அவரது திறமையை பொறுத்து நினைவில் இருக்கும். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் அந்த வீரர் கொண்டாடப்படுவார். அவரது முதல் ஆட்டம் நினைவில் இருக்கும்.
அதே சமயம் முதல் ஆட்டத்தில் சொதப்பி, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் அந்த வீரரின் முதல் போட்டி யாருக்கும் நினைவில் இருக்காது. இதற்கு சரியான உதாரணம் சச்சின் டெண்டுல்கர் என்று சொல்லலாம். அவரது முதல் போட்டி குறித்து இப்போது யாரும் அதிகம் பேசுவதில்லை. அதே சமயம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் யார் என்பது பலரும் அறியாத ஒரு தகவலாக இருக்கிறது.
1987-ம் ஆண்டு இறுதியில் விவியன் ரிச்சர்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் வெங்கசர்கார் சதமடித்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விவியன் ரிச்சர்ஸ் சதமடித்து தனது அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.
தொடர்ந்து மும்பை மற்றும் கொல்த்தா ஆகிய மைதானங்களில் நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் சென்னையில் தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக சுழற்பந்துவீச்சாளர் நரேந்திர ஹிர்வானி களமிறங்கினார். இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 382 ரன்கள் குவித்தது. கேப்டன் கபில்தேவ் 109 ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விவியன் ரிச்சர்ஸ் 68 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய நரேந்திர ஹிர்வானி 18.3 ஓவர்கள் பந்துவீசி 61 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 217 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
இதனால் 416 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்திய நரேந்திர ஹிர்வானி 2-வது இன்னிங்சில் 15.2 ஓவர்கள் பந்துவீசி 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 2 இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகள் வீழ்த்திய நரேந்திர ஹிர்வானி 137 ரன்கள் எடுத்து 16 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் பாப் மாஸ்ஸியின் சாதனையை முறியடித்தார்.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நரேந்திர ஹிர்வானி 54 ரன்களும், 66 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 1996-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே நரேந்திர ஹிர்வானி விளையாடிய கடைசி சர்வதேச போட்டிகளாகும். ஓய்வுக்கு பின் நேபாள அணியின் இயக்குனராக நரேந்திர ஹிர்வானி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“