சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இதில் குறிப்பாக 1990-களில் தொடங்கி இந்திய கிரிக்கெட் அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். அந்த வகையில் முக்கிய வீரரான இந்திய அணியில் இடம் பிடித்து பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்தவர் விவிஎஸ் லட்சுமண்.
முன்னாள் குடியரசு தலைவரின் கொள்ளுபேரன்
1974-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஹைதராபாத்தில் பிறந்த விவிஎஸ் லட்சுமண், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் கொள்ளுபேரன் ஆவார். ஹைதராபாத் லிட்டில் ஃபிளவர் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த லட்சுமண், மருத்துவம் படித்துள்ளார். ஆனாலும் கிரிக்கெட் விளையாடுவதை தனது வாழ்க்கையின் திட்டமாக வைத்திருந்த லட்சுமண் அதில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
1994-ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாக பிரட் லீ, கில்லெஸ்பி ஆகியோரின் பந்துவீச்சு தாக்குதலை சமாளித்து 88 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த தொடரின் 2-வது போட்டியில் சதமடித்து 151 ரன்கள் குவித்த லட்சுமண், 3-வது போட்டியிலும் அரைசதம் கடந்து தனது அறிமுக தொடரின் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் அறிமுகமான லட்சுமண், முதல் இரு போட்டிகளில் 25 ரன்களுக்குள் வீழ்ந்தாலும், 3-வது போட்டியில் 77 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக லட்சுமண், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட 19 வயதுக்குட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் 20, 2-வது போட்டியில் 5 ரன்கள் என விரைவில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 119 ரன்கள் குவித்தார். 2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்ய வருவதற்கு முன் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் லட்சுமண் குறிப்பிடத்தக்க ரன்கள் சேர்க்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை
1996-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் அறிமுகமான லட்சுமண், அநத போட்டியில் 2-வது இன்னிங்சில் அரைசதம் கடந்தாலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில், 14 மற்றும் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இந்திய அணி தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் சென்றபோது ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடினார்.
அப்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலமாக இருந்ததால் லட்சுமணுக்கு இந்திய அணியின் உறுதியான இடம் கிடைக்கவில்லை. 1997-இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கினார். இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 64 ரன்கள் குவித்த லட்சுமண், 2-வது இன்னிங்சில் 110 பந்துகளை சந்தித்து 27 ரன்கள் எடுத்தார். 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 0, 2-வது இன்னிங்சில் 9, 3-வது டெஸ்ட் போடடியில் 6, 19, 4-வது டெஸ்டில் 54, ரன்கள் எடுத்தார்.
இதன் காரணமாக இந்திய அணியில் அவ்வப்போது எமெர்ஜென்சி ப்ளேயாராக இடம் பெற்று வந்த லட்சுமண், 1998-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 95 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம் பெற்றிருந்தாலும், இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒருநாள் போட்டி அறிமுகம்
1998-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பெப்சி ட்ரை சீரியஸ் மூலம் ஒருநாள் தொடரில் அறிமுகமான லட்சுமண், டக் அவுட் ஆனதால், ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட், ஆசிய சாம்பியன்ஷிப் என ஒரு சில போட்டிகளில் பங்கேற்ற லட்சுமணுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இதனால் 1999-ம் ஆண்டு மீண்டும ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய லட்சுமண், அந்த சீசனில் 1415 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 9 போட்டிகளில் 8 சதங்களை அடித்திருந்தார். இந்த சாதனையை இன்னும் எந்த வீரரும் முறியடிக்கவில்லை.
இந்த ஆட்டத்தின் காரணமாக 2000-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் மீண்டும் லட்மணுக்கு இடம் கிடைத்தது. இந்த தொடரின் சிட்டினியில் நடைபெற்ற 3-வது டெஸட் போட்டியில் 167 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பிறகு தொடர்ந்து இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்ட லட்சுமண், 2007-08 காலக்கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்தார்.
இந்த காலக்கடத்தில் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 116 ரன்கள் குவித்த லட்சுமண், டெஸ்ட் போட்டியில் 12-வது சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது சதத்தையும் பதிவு செய்தார். சிட்னி மைதானத்தில் தொடர்ச்சியாக தனது 3-வது சதத்தை பதிவு செய்திருந்தார். அடுத்து பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி மற்றும் பந்துவீச்சாளர் ஆர்பி சிங் உதவியுடன் 79 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபி
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து அரைசதம் கடந்த ஒரே வீரர் லட்சுமண் மட்டும் தான். அந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் 61 ரன்கள் எடுக்க இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. ஆனாலும் இந்த போட்டியில் லட்சுமண் டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார்,
தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 2 அரைசதங்கள் மற்றும் 2 இரட்டை சதங்களுடன் 381 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் டெல்லி பெரோஷன் கோட்லா மைதனாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இதேபோட்டியில் கம்பீர் இரட்டை சதம் அடித்தனர். இதன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக இரட்டை சதம் அடித்த முதல் ஜோடி என்ற பெருமை பெற்றனர்.
அதன்பிறகு 2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட முக்கிய அணிகளுக்கு எதிரான ரன் குவிக்க தவறிய லட்சுமண், 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வுக்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட லட்சுமண், தான் விளையாட விரும்பவில்லை என்று கூறிவிட்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லட்சுமண் 17 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 59 ரன்கள் எடுத்த லட்சுமண் 2-வது இன்னிங்சில் 281 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் சுனில் கவாஸ்கரின் 236 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். 2004-ம் ஆண்டு சேவாக் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முச்சதம் அடிக்கும்வரை இந்தியர் ஒருவரின் அதிகபட்ச டெஸ்ட் ரன்னாக லட்சுமண் குறித்த 281 ரன்கள் தான் இருந்தது.
லட்சுமண் புள்ளி விபரங்கள்
இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லட்சுமண், 8781 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்களும்,56 அரைசதங்களும் அடங்கும். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2338 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் 10 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 131 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ள லட்சுமண், 2002-ம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரின் தொடர்ந்து 3 சதங்கள் அடித்துள்ள வீரர்களில் ஒருவராக லட்சுமண், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 281 ரன்கள் குவித்த இன்னிங்ஸ், விஸ்டன் கிரிக்கெட் வரலாற்றில் 6-வது சிறந்த இன்னிங்ஸாக பதிவாகியுள்ளது. ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் அல்லாமல் 12 கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற சாதனையை ஆலன் பார்டருடன் பகிர்ந்துகொண்டார்.
டெஸ்ட் போட்டியில் 3-வது இன்னிங்சில் ராகுல் டிராவிட்டுன் இணைந்து 381 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த ஜோடியாக இன்றுவரை இருக்கிறது. ஒரே மைதானத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் லட்சுமண். கொல்கத்தா ஈடன் கார்டன் மைானத்தில் 1217 ரன்கள் குவித்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் உலகளவில் 3 வது இடத்திலும் இந்தியளவில் முதலிடத்திலும் உள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விவிஎஸ் லட்சுமண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.