இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் இந்தியா எந்த தொடரில் விளையாடியானலும் அந்த போட்டி உலகில் அதிக ரசிகர்கள் பார்த்த போட்டியாக மாறிவிடுவது வழக்கமான ஒன்று. இதனால் உலக கிரிக்கெட் இந்திய அணிக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. அதேபோல் ஆசிய அணிகளில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இரு நாடுகளில் போர் போன்ற தோற்றம் உள்ளது.
சமீப காலமாக அரசியல் பிரச்சனைகளின் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக எந்த போட்டியிலும் விளையாடாமல் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இதில் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உலககோப்பை டி20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 30) தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது. இதனால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆசிய நாடுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1983-ம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடங்கப்பட்ட நிலையில், 1984-ம் ஆண்டு முதல் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆகிய 3 நாடுகள் மட்டுமே பங்கேற்றது. ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 2 வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐசிசியில் புதிய உறுப்பினராக இலங்கை அணி பாகிஸ்தானுக்க எதிரான ஒரு வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
ஒருநாள் போட்டி – டி20 போட்டிகள்
1983-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டி தொடராக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர், டி20 தொடரை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் டி20 தொடராகவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் போட்டி அடுத்த 2 ஆண்டு கழித்து டி20 தொடர் என்று நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிய கோப்பை அதிகமுறை சாம்பியன் இந்தியா
ஆசியகோப்பை தொடர் இதுவரை 15 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் இதில் 14 முறை போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று 7 வெற்றிகளுடன் அதிகமுறை சாம்பியன் ஆன அணிகள் பட்டியலில முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இலங்கை அணி 6 (5 ஒருநாள் 1 டி20) முறை சாம்பியன் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 2 சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆசியகோப்பை தொடரை புறக்கணித்த இந்தியா – பாகிஸ்தான்
1984-ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் தொடங்கப்பட்ட நிலையில், இந்த தொடரின் 2-வது சீசன் கடந்த 1986-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. இலங்கையுடனான கிரிக்கெட் உறவு சுமோகமாக இல்லாத நிலையில், இந்தியா இந்த போட்டியை புறக்கணித்தது. இதனால் வங்கதேச அணி தொடரில் சேர்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தொடர்ந்து ஆசியகோப்பை தொடரின் 4-வது சீசன் கடந்த 1990-91-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுடனான அரசியல் உறவில் மோதல் ஏற்பட்டதால் பாகிஸ்தான் இந்த போட்டியை புறக்கணித்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆசியகோப்பை தொடரில் முதல் சதம்
கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது ஆசியாகோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மொயின் உல் ஹக் வங்கதேசத்திற்கு எதிராக 105 ரன்கள் எடுத்ததே ஆசிய கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட முதல் சதமாகும். அதோபோல் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியகோப்பை தொடரில் மொத்தம் 13 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் ஜெய்சூரியா 6 சதங்கள் அடித்து ஆசியகோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக இலங்கையின் சங்ககாரா, இந்தியாவின் விராட்கோலி ஆகியோர் தலா 4 சதங்களும், பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் 3 சதங்களும் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவின் விராட்கோலி 183 ரன்கள் எடுத்ததே ஆசிய கோப்பை தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும். அதே சமயம் இந்த தொடரில் விராட்கோலி 2 சதங்கள் எடுத்தால் ஜெய்சூரியாவின் சாதனையை சமன் செய்வார்.
ஆசியகோப்பை தொடரில் அதிக விக்கெட்
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொடரில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 17 விக்கெட் எடுத்ததே ஒரு தொடரில் எடுத்த அதிகபட்ச விக்கெட்டாகும். இந்தியா சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு இர்பான் பதான் 14 விக்கெட்டுகளும், கடந்த 2018-ம் ஆண்டு குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியகோப்பை டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான எடுத்த 212 ரன்களே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும. அதே ஆண்டு ஹாங்காங் அணி வங்கதேச அணிக்கு எதிராக 38 ரன்களில் சுருண்டே குறைந்தபட்ச ஸ்கோராகும்.
கடந்த 2010-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்ததே ஆசியகோப்பை தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். அதேபோல் 2000-ம் ஆண்டு வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 87 ரன்களே ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.
2023 ஆசியகோப்பை தொடரில் விளையாடும் அணிகள்
1984-ம் ஆண்டு 3 அணிகள் மட்டுமே விளையாடிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 1986-ம் ஆண்டு வங்தேச அணி இணைந்தது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு ஹாங்காங், யுஏஇ ஆகிய அணிகள் இணைந்து 6 அணிகள் விளையாடியது. 2023 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்தியா
2023-ம் ஆண்டு ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. ஆனால் அரசியல் விவகாரம் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு இல்லாத நிலையில், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தது. இதனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டது. அதன்படி இலங்கையில் 9 போட்டிகள் மற்றும் பாகிஸ்தானில் 4 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.